தருமபுரி: தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள சுஞ்சல்நத்தம் ஊராட்சி, எம்.தண்டா பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் பெங்களூரில் சிப்ஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசனுக்கும், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
தற்போது இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகனும் மற்றும் மூன்று வயதில் ஒரு மகளும் உள்ளார். இந்த நிலையில், வெங்கடேசன் அடிக்கடி மது போதையில் பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனால் சமீபத்தில் பிரியா ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, ஏரியூர் காவல் ஆய்வாளர் விசாரணை செய்து சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற சூழலில், நேற்று (செப்.21) மீண்டும் மது போதையில் தனது வீட்டிற்கு வந்த வெங்கடேசன், பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், அப்பொழுது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பிரியாவின் கையை கிழித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாது, பாலக்கோட்டில் உள்ள பிரியாவின் பெற்றோருக்கு "உங்களது மகள் தற்கொலை செய்து கொண்டாள்" என்று தகவல் கூறியதாகவும், இதனை அடுத்து பிரியாவின் உறவினர்கள் வருவதற்குள் அடக்கம் செய்வதற்காக வெங்கடேசன் ஏற்பாடு செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.