தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஏர்போர்ட் மூடப்பட்டதால், குவிந்திருக்கும் பயணிகளுக்காக மாநகர பேருந்துகள் இயக்கம்!

புயல் மற்றும் கனமழை காரணமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் மாநகர பேருந்து
விமான நிலையத்தில் மாநகர பேருந்து (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2024, 4:18 PM IST

சென்னை:ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் சென்னை விமான நிலைய பகுதியில் காலை முதல் பலத்த காற்றுடன் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் பெரும்பாலான விமான சேவைகள் பாதிக்கப்பட்டு மதியம் 12.30 மணி முதல் மாலை 7 மணி வரை தற்காலிகமாக விமான நிலையம் மூடப்படுவதாக சென்னை ஏர்போர்ட் நிர்வாகம் தெரிவித்தது.

சென்னையில் விமான நிலையம் மூடப்பட்டதால், விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் அனைவரும் தங்கள் பகுதிகளுக்கு வாடகை கார்களில் செல்கின்றனர். அதிகப்படியானோர் செல்வதால் பல பயணிகளுக்கு வாடகை கார் கிடைக்காமல் விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், மழையை காரணம் காட்டி வாடகை கார்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் பயணிகள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், சென்னை விமான நிலையமும், தமிழ்நாடு மாநகரப் போக்குவரத்து கழகமும் இணைந்து சென்னை விமான நிலைய பயணிகளின் வசதிக்காக இன்று மதியம் முதல் மாநகர பேருந்துகள் சென்னை விமான நிலையத்திற்குள் இயக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் உள்நாட்டு விமான நிலைய வருகை பகுதி, சர்வதேச விமான நிலைய வருகை பகுதி ஆகிய இடங்களுக்குள் வந்து விமான பயணிகளை ஏற்றி செல்கின்றன.

இதையும் படிங்க:"ஃபெஞ்சல் புயல் இப்போது மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது?

குறிப்பாக கிளாம்பாக்கம், கோயம்பேடு, சென்னை பாரிமுனை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் மாநகர பேருந்துகள், சென்னை விமான நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றி செல்கின்றன.

இந்த மாநகர பேருந்துகள் விமான நிலையத்திற்குள் வந்து செல்வது புயல் கரையைக் கடந்து மழை ஓயும் வரையில் தொடரும் என்று விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

முன்னதாக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால், விமான நிலையத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் ஒரே இடத்தில் அமர வைக்கப்பட்டனர். இதில் பெரும்பாலான பயணிகள் அனைவரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்களில் பயணிக்க வந்தவர்கள் என கூறப்படுகிறது.

மேலும், விமான நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை அந்தந்த தனியார் விமான சேவை நிறுவனங்கள் செய்து கொடுப்பதாக பயணிகளுக்கு உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் அனைவரும் சென்னை விமான நிலையத்தில் பல மணி நேரங்களாக தவித்து வந்த நிலையில், மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details