சென்னை: சிஐடியு தலைவர் சௌந்தர ராஜன் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பொதுவாகவே காவல் துறையினராக இருந்தாலும் பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்பதுதான் அரசாங்க விதி. அவர்கள் பணியின் நிமித்தமாக, அதுவும் வாரண்ட் இருந்தால் மட்டுமே பேருந்தில் இலவசமாக பயணிக்க முடியும். வாரண்ட்டை பேருந்தின் நடத்துநரிடம் காண்பித்து பின்னர் மீண்டும் வாங்கிக் கொள்ளலாம்.
தற்போது நாங்குநேரியில் காவலர் ஆறுமுகபாண்டியன் பேருந்தில் பயணித்த போது நடத்துநர் பயணச்சீட்டு வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அவர், பயணச்சீட்டு வாங்க மறுத்து விட்டார். பின்னர், இருவருக்குமிடையே பெரும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்த நிகழ்வின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத்துறை அதிகாரிகள், அரசுp பேருந்து ஓட்டுநர்கள் மீது சீட் பெல்ட் போடாமல் வாகனம் இயக்குவது மற்றும் நோ பார்க்கிங் போன்ற பல்வேறு காரணங்களைக் கூறி அவர்களுக்கு அபராதம் விதித்துக் கொண்டு இருக்கின்றனர்.
இது ஒரு மோசமான பழி வாங்கும் நோக்கத்தோடு போலீசார் செயல்படுகின்றனர். சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொண்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமான முறையில் பயணச்சீட்டு கேட்டது குறித்து தவறான புரிதல்களோடு இவ்வாறு பழி வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
போக்குவரத்து பேருந்துகளில் 10,500 பேருந்துகளுக்கு மேல் சீட் பெல்ட் என்பது இல்லை. அந்த பேருந்துகள் அனைத்துமே இயக்குவதற்கு சரியானதாக இல்லை. ஓட்டுநர்கள் இந்த பேருந்துகளை இத்ததைய காரணங்களைக் கூறி இயக்காமல் இருக்க முடியும் அல்லது ஓரமாக நிறுத்தி வைக்க முடியும். ஆனால், ஓட்டுநர்கள் அதை செய்யவில்லை.
ஏனெனில், அவர்கள் சமூகப் பொறுப்புடன் இருக்கின்றனர். அவர்கள் சமுதாயத்திற்காக தன்னுடைய உயிரை பணயம் வைத்து வேலை செய்து கொண்டிருக்கின்றனர். ஏழை மக்களைக் கருத்தில் கொண்டு சில சட்ட வரம்புகளை மீறி இவர்கள் சமூகத்திற்கு தொண்டாற்றி வருகின்றனர்.
ஆனால் பயணச்சீட்டு கொடுப்பது, வாங்குவது என்பது சாதாரணமான அடிப்படையான சட்டம். அதை அனைவரும் கட்டாயம் எடுத்துத்தான் ஆக வேண்டும். அதை எடுக்க முடியாது என்று அந்த காவலர் கூறியது தவறு. நடத்துநர் மீது எந்த தவறும் இல்லை. ஆனால் இத்தகைய சாதாரண நிகழ்விற்கு ஒரு மாபெரும் பழி வாங்கும் உணர்வோடு காவல் துறையினர் செயல்படுவது சரியான அணுகுமுறை அல்ல.