சென்னை :சென்னை, சேத்துப்பட்டில் இயங்கி வரும் எம்சிசி பள்ளிக் குழுமம் சி.ஐ.எஸ்.சி.இ உடன் இணைந்து ஒரு புதிய பள்ளியை சென்னையில் தொடங்கவுள்ளது. இதன் தொடக்க நிகழ்வு மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ பள்ளி முதல்வர்களின் மாநாடு குறித்த சந்திப்பு எம்சிசி பள்ளியில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.ஐ.எஸ்.சி.இ கவுன்சில் தலைமை செயல் அதிகாரி ஜோசப் இமானுவேல், " உலகத் தரத்திற்கு சி.ஐ.எஸ்.சி.இ கற்றல் தரத்தை அதிகரித்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக சமீபத்தில், 150 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நாட்டின் சிறந்த பள்ளளிகள் எங்களுடன் இணைந்துள்ளது. சி.ஐ.எஸ்.சி.இ பாடத்திட்டத்தின் மூலம் பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறோம். நாளை கிறிஸ்ட்வுட் பள்ளியில் சி.ஐ.எஸ்.சி.இ பள்ளி முதல்வர்களின் மாநாடு நடைபெற உள்ளது. இதன் மூலமாக பள்ளிகளில் பின்பற்றப்பட்டு வரும் சிறந்த முறைகளை ஆலோசித்து, பகிர்ந்து கொள்ள முடியும்.
எங்கள் பாடத்திட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகள் மட்டுமல்லாது, அரசுப் பள்ளிகளிலும் சிறப்பான பயிற்சி வழங்கப்பட்டால் அதனையும் ஆலோசனையாக எடுத்துக் கொள்வோம். சி.ஐ.எஸ்.சி.இ பள்ளிகள் அருகே உள்ள அரசுப் பள்ளியுடன் இணைந்து நல்ல பழக்கங்களைப் பரிமாற முடியும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சி.ஐ.எஸ்.சி.இ பள்ளிகளுக்குச் சென்று அங்கு கற்பிக்கும் முறை, ஆய்வகங்கள், நூலகம், பராமரித்தல் உள்ளிட்ட நல்ல நடைமுறைகளை பரிமாறிக் கொள்ள முடியும்.
தேசிய கல்வி கொள்கையின்படி பல்வேறு செயல்பாடுகள் பின்பற்றப்படுகிறது. பொதுத்தேர்வாக அல்லாமல் 3,5,8 ஆகிய வகுப்பு மாணவர்களிடம் அவர்களை பாதிக்காத வகையில் கற்றல் அளவீடுகளை மதிப்பிட முடியும். இதற்காக மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
ஆனால் அதன் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை என கூறுவதில்லை. இதன்மூலம் கற்றல் பாதிப்பு இருக்கிறதா என கண்டறிய முடியும். மாணவர்களுக்கு கற்றல் பாதிப்புகள் இருந்தால் அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கூடுதலாக பயிற்சி அளிக்க முடியும்.
கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதால், மொழி உள்ளிட்ட முக்கிய முடிவுகளில் மாநில அரசுகளின் கொள்கை படி செயல்படுகிறோம். தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இருந்தாலும், மாநிலங்களின் மொழிக் கொள்கையின் அடிப்படையில் கற்பிக்கிறோம். மூன்றாவதுவாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துவதில்லை. அது மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது.