புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர் முகமது பயாஸ்(40). கடந்த 2022ஆம் ஆண்டும் இவருக்கு நன்கு அறிமுகமான தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரத்தைச் சேர்ந்த முகமது சுகைல்(32). இவர் தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யும் பணியினை நான் சேர்ந்து செய்வோம் எனக் கூறி, போலியான வங்கி ஆவணங்களைக் காட்டி முகமது பயாஸிடம் இருந்து சுமார் ரூ.1 கோடியே 25 லட்சத்தை வாங்கியுள்ளார்.
ஆனால், அவருக்கு அந்த பணியைப் பெற்றுத் தரவில்லை எனத் தெரிகிறது. பின்னர், இதுகுறித்து முகமது பயாஸ் விசாரித்தபோது, அவர் காண்பித்த வங்கி ஆவணங்கள் அனைத்தும் போலி என்பது தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த முகமது பயாஸ், இந்த மோசடி தொடர்பாகப் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கடந்த 6 மாதமாகத் தலைமறைவாக இருந்த டெல்டா வணிகர் நலச் சங்கத் தலைவரான சோழபுரம் முகமது சுகைலை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், முகமது சுகைல் சோழபுரம் வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குற்றப்பிரிவு போலீசார் முகமது சுகைலை கைது செய்தனர்.