தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள சிறுநாடார் குடியிருப்பைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவரது மகளின் பூப்புனித நீராட்டு விழா நேற்றிரவு (மே 26) நடைபெற்றுள்ளது. இதில் சுயம்புலிங்கத்தின் அண்ணன் செந்தில்குமார் (50) சமையல் செய்துள்ளார்.
இந்த நிலையில், விழா விருந்தில் உணவு பரிமாறும்போது முட்டை வைக்கவில்லை என செந்தில்குமாருக்கும் அவரது சித்தப்பா துரைப்பாண்டி (60) என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே துரைப்பாண்டி அரிவாளால் செந்தில்குமாரின் வலது காலின் பின்பக்கத்தில் வெட்டியுள்ளார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த செந்தில்குமாரை உறவினர்கள் உடன்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் செந்தில்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.