திருச்சி:மணப்பாறை அடுத்த சித்தாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி மகன் வையாபுரி(51). இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு காந்திமதி என்ற தங்கை உண்டு. கணவரை விட்டுப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வரும் காந்திமதியும் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், வையாபுரி தனது தங்கைக்கு செட்டிசித்திரம் கிராமத்தில் சுமார் 1200 சதுர அடி கொண்ட காலி மனை ஒன்றினை, ரூ.1 லட்சம் கொடுத்து கடந்த பிப்.21 ஆம் தேதியன்று வாங்கிக் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த காலி மனைக்குரிய பட்டா பெயர் மாற்றம் தொடர்பான ஆவணங்களை ஆன்லைன் மூலம், சம்பந்தப்பட்ட சித்தாநத்தம் கிராம அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் அங்கு சிவ செல்வகுமார்(41) என்பவர் கூடுதல் பொறுப்பாக சித்தாநத்தம் விஏஓவாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது பட்டாவைக் கண்ட சிவ செல்வகுமார், வையாபுரியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, பட்டா பெயர் மாற்றத்திற்கு உண்டான ஆவணங்களை எடுத்துக் கொண்டு நேரில் வருமாறு கூறியுள்ளார்.
அதனடிப்படையில், மார்ச் 1ஆம் தேதி பட்டா பெயர் மாற்றத்துக்கு உண்டான ஆவணங்களை எடுத்துக் கொண்டு சித்தாநத்தம் விஏஓ அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்த சிவ செல்வகுமாரைச் சந்தித்த வையாபுரி ஆவணங்களையும் கொடுத்துள்ளார். அப்போது ஆவணங்களைச் சரிபார்த்த விஏஓ தனக்குத் தனியாக ரூ.2 ஆயிரம் கொடுத்தால், பட்டா பெயர் மாற்றம் செய்ய உடனடியாகப் பரிந்துரை செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
அதைக் கேட்ட வையாபுரி, தான் விவசாயக் கூலி வேலை செய்து வருவதாகவும், தன்னால் ஏற்பாடு செய்ய இயலாது எனக் கெஞ்சியதாகக் கூறப்படுகிறது. அதனால் விஏஓ தான் கூறிய தொகையில் பாதியைக் குறைத்துக் கொண்டு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் செய்ய ஏற்பாடு செய்துதர முடியும் என்று கூறியுள்ளார்.
லட்சம் கொடுக்க விரும்பாத வையாபுரி, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புப் போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, நேற்று (மார்ச் 5) மதியம் 12 மணியளவில் விஏஓ சிவ செல்வகுமார் லஞ்சப் பணத்தைப் பெற்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் சிவ செல்வகுமாரை கையும் களவுமாகப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல்; பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை