தேனி:தேனி மாவட்டத்தில் உள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அமுதன்- சரவணகுமாரி தம்பதி. இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடியேறி வசித்து வந்தனர். இவர்களது மகன் தருண்ராஜ், அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
மணமகன் மற்றும் மணமகள் தந்தை பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) இந்த நிலையில், அதே நிறுவனத்தில் பணிபுரியும் சீனாவைச் சேர்ந்த ஸ்னோ ஜூ என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். அமெரிக்காவில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இருவரும் தமிழ் முறைப்படியான திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில், தருண்ராஜ் - ஸ்னோ ஜூ தம்பதி, இன்று (செப்.15) மாப்பிள்ளையின் பூர்விக கிராமமான தேனி அருகே அம்மச்சியாபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்வில் பெண்ணின் தந்தை, தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கொண்டு திருமணத்தில் கலந்து கொண்டார். அவர்களுடன் மாப்பிள்ளையின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க:காதல் வந்தாலே மூளையில் மின்னல் தான்! எந்த அன்புக்கு எப்படி செயல்படும் மூளை?
இதுகுறித்து மாப்பிள்ளை தருண்ராஜ் கூறுகையில், “நாங்கள் ஐந்து வருடமாக காதலித்து வருகிறோம். அவர்களை தேனி அழைத்து வந்து எங்களது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன், அது நடைபெற்றது. தற்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடன் வேலை செய்பவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டனர். அவர்களுக்கு தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளோம்.
இதையடுத்து பேசிய மணப்பெண் ஸ்னோ ஜூவின் தந்தை பீட்டர் ஸ்னோ கூறுகையில், “நாங்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள். 28 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடியேறினோம். எனது மகள் இந்தியாவைச் சேர்ந்த நபரை திருமணம் செய்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. ஊர் மக்கள் எங்களை அன்புடன் வரவேற்றனர். அவர்களின் அன்பு எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. அமெரிக்காவில் கோட் சூட் உடன் இருந்த நான், தற்போது வேட்டி, சட்டை அணிந்திருப்பது புதிதாக உள்ளது. இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” எனத் தெரிவித்தார்.