சென்னை:நாடு முழுவதும் நடைபெற்று வரும் 18-வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளையுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது. தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், அரசு தொடர்பான எந்த நிகழ்வுகளையும் நடத்த முடியாத நிலை உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பின், ஜூன் 6ஆம் தேதியுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின் அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள், புதிய அறிவிப்புகள் உள்ளிட்டவை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜூன் 11-இல் தொடங்கி, வெவ்வேறு தேதிகளில் நான்கு நாள்கள் நடக்கும் கூட்டம் ஜூன் 19-இல் நிறைவடைகிறது.
ஜூன் 11ஆம் தேதி அன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுடனும், ஜூன் 13ஆம் தேதி அன்று திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனைகள் நடைபெறவுள்ளன.
தொடர்ந்து ஜூன் 15ஆம் தேதி சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுடனும், ஜூன் 19ஆம் தேதியன்று மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கவுள்ளன. இக்கூட்டங்கள் அனைத்தும் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் காலை 9.30 மணிக்குத் தொடங்கி நடைபெறும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க:வருங்கால வைப்பு நிதி விவகாரம்; அண்ணா பல்கலை மேல்முறையீடு! - Anna University PF Issue