தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“20 செ.மீ வரை மழை பெய்தால் சமாளிக்கலாம்..” தலைமைச் செயலாளர் தகவல்! - Shivdas Meena inspected - SHIVDAS MEENA INSPECTED

SHIVDAS MEENA INSPECTED: 15 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை இருந்தால் நிச்சயம் அதைச் சமாளித்து விட முடியும் என தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மழைநீர் வடிகால் பணியை ஆய்வு செய்த தலைமை செயலாளர்
மழைநீர் வடிகால் பணியை ஆய்வு செய்த தலைமை செயலாளர் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 3:11 PM IST

சென்னை:தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் நோக்கில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கால்வாய்கள், நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வாருதல், ஆகாயத்தாமரையை அகற்றி தயார்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், தியாகராய நகர் டாக்டர் நாயர் சாலையில் நடைபெற்று வரும் மழை நீர் கால்வாய் தூர்வாரும் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்து செய்தார். அப்போது, அவருடன் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.

மழை நீர் கால்வாய் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா கூறுகையில், "தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கும் போது திடீரென அதிக கனமழை பெய்யலாம்.

அந்த நேரத்தில் எங்கும் மழை நீர் தேங்கி விடக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சென்னை மாநகராட்சி மற்றும் நகர்ப்புற அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தூர்வாரும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றன. சென்னை மட்டுமல்லாமல், கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரங்களிலும் மழைநீர் வடிகால் பணிகள் முன்னெச்சரிக்கையாக மேற்கொண்டு வருகிறோம்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்ட ஆட்சியர்களிடம் பேசி கவனமாக இருக்க அறிவுறுத்தி உள்ளோம். மேலும், காற்றுடன் அதிக மழை பெய்தால் மரம் வெட்டும் இயந்திரம் உள்ளிட்டவையும் தயாராக இருக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

மேலும், “மக்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இருக்கக் கூடாது என்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழையால் வடிகால் பணிகள் சிலவற்றை நிறுத்தி வைத்து இருந்தோம்.

ஜனவரி மாதத்திற்குப் பிறகு மறுபடியும் பணிகள் தொடங்கியுள்ளன. செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போதுதான் மழைக் காலங்களில் நமக்கு அது உதவும். ஒவ்வொரு வாரமும் சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெறுகிறது.

தொடர்ந்து மாவட்ட வாரியாக மாதத்திற்கு ஒரு முறையும் கூட்டம் நடைபெற்று வருகிறது. மின்சாரத்துறை, குடிநீர் வாரியம், போக்குவரத்து துறை என அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து எங்கெங்கோ என்னென்ன பிரச்சினைகள் உள்ளது என்பது குறித்து அனைத்தும் ஒருங்கிணைந்து தான் செயலாற்றி வருகிறோம். பருவமழைக்குள் பணிகள் முடிந்து விடும்.

சென்னையின் மையப்பகுதியில் கூடுதலாக பணிகள் நடைபெற்று வருகிறது. அவை செப்டம்பர் மாதத்திற்குள் நூறு சதவீதம் முடிவடைந்து விடும். எதிர்பார்க்காத அளவுக்கு மழை வந்தால் சென்னை மட்டுமல்ல, எந்த மாவட்டமும் தாங்க முடியாது. சாதாரண மழை என்றால் அவற்றை கட்டுப்படுத்த முடியும்.

எதிர்பார்க்காத அளவுக்கு மழையும் இருந்தால் அங்கங்கே மழை நீர் தேங்க தான் செய்யும். 15 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்தால் நிச்சயம் அதை சமாளித்து விட முடியும். டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் தெரிவித்து, பிரச்சினைகள் இருந்தால் அதற்கு கணக்கெடுத்து தருமாறு அறிவுறுத்தி உள்ளோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட பாராமெடிக்கல் படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது?

ABOUT THE AUTHOR

...view details