சென்னை:'தமிழ் தேசியத் தந்தை'யாக கருதப்படும் அயோத்திதாசப் பண்டிதரின் 179 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்தும் திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.
கெளரவிக்கும் தமிழக அரசு:சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் கடந்த ஆண்டு தான் பண்டிதர் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் சமூக வலைத்தளம் மூலமாக அயோத்திதாசப் பண்டிதர் பிறந்தநாளை முன்னிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் 'தமிழன், திராவிடன் என்ற இரு சொற்களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கிய நமது பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்! முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்!’ எனக் குறிப்பிட்டுள்ளார்.