தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை தமிழக பள்ளிக் கல்வி துறையின் ஆய்வு கூட்டம்; நிறைவேறுமா ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு..? - TN SCHOOL EDUCATION DEPARTMENT

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறவுள்ள தமிழக பள்ளிக் கல்வித் துறையின் ஆய்வு கூட்டத்தில் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்று பகுதி நேர ஆசிரியர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

பள்ளிக் கல்வி துறையின் ஆய்வு கூட்டம்
பள்ளிக் கல்வி துறையின் ஆய்வு கூட்டம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2024, 5:10 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் சாதனைகளையும், அரசின் திட்டங்களின் செயல்பாட்டையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (நவ.8) தலைமைச் செயலகத்தில் ஆய்வு செய்கிறார். இதனால் ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளும் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி பள்ளிக் கல்வித்துறையின் இயக்குநர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டத்தை நவம்பர் 4 ந் தேதி நடத்தினார். அப்போது நவ.8ந் தேதி முதலமைச்சர் பள்ளி கல்வித் துறையின் ஆய்வுக்கூட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்திருந்தார்.

திமுக அரசு அமைந்து மூன்றரை ஆண்டுகள் முடிய உள்ள நிலையில், துறைவாரியான ஆய்வுக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நாளை துவக்குகிறார். துறைவாரியான ஆய்வுக் கூட்டத்தில் முதலில் நாளை பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.

முன்னதாக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் சில கோரிக்கைகளை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், கடந்த 13 ஆண்டுகளாக தற்காலிக நிலையில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரியும் 12 ஆயிரம் பேருக்கும், காலமுறை சம்பளம், பணிநிரந்தரம் என பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும். இதை இந்த ஆய்வு கூட்டத்திலேயே முதல்வர் செய்ய வேண்டும்'' என கூறியிருந்தார்.

இதையும் படிங்க:விஜயை சந்திப்பாரா திருமாவளவன்..? கனிமொழி கொடுத்த நச் பதில்..!

இரு கண்கள்: கல்வியும், சுகாதாரமும் தனது இரு கண்கள் என கருதும் முதலமைச்சர் ஸ்டாலின், முதலில் பள்ளிக் கல்வித் துறையில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியை கற்க வேண்டும் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற் கல்வியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு, புதுமைப்பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன் ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், தமிழ்நாட்டில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கவும், வெளிநாடுகளுக்கு சென்று படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இது போன்ற திட்டங்களால் அரசுப் பள்ளிகள் மீது மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ஆண்டுதோறும் 1,500 கோடி ரூபாய் நிதி, மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வது போன்ற கனவு ஆசிரியர் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு வெளிநாடு கல்வி சுற்றுலா என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

வாக்குறுதிகள்:ஆனாலும், திமுகவின் தேர்தல் வாக்குறுதியான; பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு இரண்டாம் கட்ட போட்டி தேர்வு இல்லாமல் பணி நியமனம், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களைவது உள்ளிட்ட சில திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன.

குறிப்பாக, அரசு பள்ளிகளில் 14 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டும், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்காமலும் உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஒட்டுமொத்த பணிகளும் நிறுத்தப்பட்டு இருப்பதாக பேச்சுக்கள் கிளம்பிய சூழலில், ஆசிரியர் நியமனத்தில் எழுந்துள்ள சிக்கல்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தீர்வு காண்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details