நான் போட்டியிடுவது குறித்து முதல்வர் முடிவு செய்வார் தூத்துக்குடி: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்குப் பாராட்டு விழா தூத்துக்குடியில் நடைபெற்றது.
இந்த பாராட்டு விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமை தாங்கி, வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்ட 850 மீனவர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு தொகுப்பு வழங்கி வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி, "ஒரு கருத்தை யார் வேண்டுமானாலும் அது எவ்வளவு காட்டமாக கருத்தாக இருந்தாலும் முன்வைக்கலாம். அது அரசியலில் ஒரு சாதாரண விஷயம். அது எப்படிச் சொல்கிறோம் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அடிப்படை நாகரிகம் தாண்டி செல்லக்கூடாது என்பதைத்தான் நான் நினைக்கிறேன். மேலும், டெல்லியில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்றும், திமுக தலைவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதைப் பொறுத்து தான் தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து தெரியும்" என்று கூறியுள்ளார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: பணிப்பெண் கொடுமை; தம்பதி மீது வழக்குப் பதிவு.. திருமாவளவன் கடும் கண்டனம் - பல்லாவரம் எம்எல்ஏ ரியாக்ஷன் என்ன?