சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அடையாறில் அமைந்துள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது, அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மேயர் பிரியா, மற்றும் சிவாஜி கணேசனின் குடும்பத்தார் பிரபு, ராம்குமார் மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார். மேலும், சிவாஜி கணேசன் மணிமண்டபத்தையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.
இதையும் படிங்க:தென் மாவட்ட பள்ளிகளில் பெருகும் சாதி மோதல்கள்; போர்க்களமாக மாறும் கல்விக் கூடங்கள்.. தீர்வு தான் என்ன?
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரபு, '' எங்களது தந்தையின் பிறந்தநாளுக்கு மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் வருகிறார். முதல் முறை வந்தார், இரண்டாவது முறை வரும்போது சிலையைப் புதுப்பித்துக் கொடுத்தார். மூன்றாவது முறை வரும்போது புகைப்படக் கண்காட்சியுடன் மரியாதை கொடுத்து பெருமைப்படுத்தியுள்ளார்.
அரசாங்க விழாவாக இதை கொண்டாடியுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு எங்களின் குடும்பத்தின் சார்பாகவும், ரசிகர்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
நடிகர் சிவாஜி கணேசனின் எந்த திரைப்படம் வெளியானாலும் முதல் 20 டிக்கெட் கருணாநிதி அவர்களின் குடும்பத்திற்காக வாங்குவார்கள். முதல்வர் ஸ்டாலின் மிகப்பெரிய ரசிகர். அதனால், திருச்சியில் கூடிய விரைவில் சிலை அமைத்து தருவார்கள் என்று நம்பிக்கை உள்ளது என்றார்.