சென்னை: நாட்டின் 76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று (ஜன.26) தமிழ்நாட்டின் சிறந்த முதல் மூன்று காவல் நிலையங்களுக்கு முதலமைச்சரின் கோப்பைகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டின் அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்கள் ஆகியவற்றில் உள்ள காவல் நிலையங்களில் சிறப்பாக செயல்பட்டு குற்றங்களை குறைத்தல். உடனடியாக நடவடிக்கை எடுத்தல் போன்ற திறன்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அதனடிப்படையில் சிறந்த காவல் நிலையத்திற்கான முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
முதல் பரிசு
அதன் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக மதுரை மாநகரத்தை சேர்ந்த எஸ்.எஸ்.காலனி காவல் நிலையம் முதலிடத்தை பெற்றது. இதற்கான விருதை இன்று முதலமைச்சரிடம் காவல் ஆய்வாளர் கே. காசி பெற்றுக் கொண்டார். விருதைப் பெற்றுக் கொண்டப் பின்னர் காவல் ஆய்வாளர் காசி கூறும்போது, '' காவல் நிலையத்திற்கு வரும் புகார்களை விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் பொது மக்கள் புகார் அளிக்க வந்தால் அவர்களின் புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், திருவிழா காலங்களில் எந்தவிதமான குற்றச் செயல்களும் நடைபெறாமலும் தடுத்து வருகிறோம். பண்டிகை காலங்களிலும் குடும்பத்தை விட பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகிறோம்'' என தெரிவித்தார்.