சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டு தோறும், குடியரசு தினவிழாவின் போது வீரதீர செயல் புரிந்த நபர்களைக் கௌரவிக்கும் விதமாக முதல்வர் விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் குடியரசு தினவிழாவில் நெல்லையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் டேனியல் செல்வசிங்குக்கு வீரதீர செயலுக்கான முதல்வர் விருதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவப்படுத்திய சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
யார் இந்த டேனியல் செல்வசிங்?: திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காந்திமதி. இவருக்கு டேனியல் செல்வசிங்(16) என்ற மகனும், திவ்யா(9) என்ற மகளும் உள்ளனர். கணவனைக் கைவிட்ட காந்திமதி, அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் கூலி வேலை பார்த்து, அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தனது 2 குழந்தைகளையும் படிக்க வைத்து பராமரித்து வருகிறார்.
மேலும் கூலி வேலை பார்க்கும் வருமானத்தை வைத்து, அன்றாட வாழ்வில் மிகவும் எளிமையுடன் தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் காந்திமதியின் மகன் டேனியல் செல்வசிங் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
வெள்ளத்தில் தத்தளித்த நெல்லை: கடந்த 2023 டிசம்பர் மாதம் 16, 17 மற்றும் 18ஆம் தேதிகளில், நெல்லை மாவட்டத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரலாறு காணாத மழை பெய்து, பெருவெள்ளம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, விடாமல் கொட்டித் தீர்த்த மழையாலும், அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீராலும் நகர் பகுதிகள் மொத்தமும் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தது.
16 வயது சிறுவன் செய்த சாதனை: வெள்ளத்தில் மூழ்கிய நெல்லையில், அரசு அதிகாரிகள் உடனடியாக உள்ளே செல்ல முடியாத அளவுக்கு நெல்லை டவுன், பாளையங்கோட்டை, நெல்லை சந்திப்பு போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் சுமார் 7 அடி அளவிற்கு தண்ணீர் சூழ்ந்தது. அந்த நேரத்தில் பெரும்பாலான இடங்களில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே வெள்ளத்தில் சிக்கிய மக்களை தாமாக முன்வந்து பாதுகாத்தனர்.