சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024 நடைபெற்றது. இதில் முடிவுற்ற 19 புதிய திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து நிகழ்ச்சி மேடையில் அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டின் தொழில்துறை வரலாற்றில் இது முக்கியமான நாளாகும். கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினோம். அதில் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 631 ஆகும். இதன் மூலம் 14 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 12 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மொத்தமாகச் சொல்லவேண்டும் என்றால் கடந்த 3 ஆண்களில் 30 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 9 லட்சத்து 74 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது என்றார்.
19 வகையான திட்டங்கள் தொடக்கம்:தொடர்ந்து பேசிய அவர், ஒப்பந்தங்கள் போடப்பட்டது மட்டும் அல்லாமல், தொழில்களைத் தொடங்க தேவையான உதவிகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 19 வகையான திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. 17 ஆயிரத்து 617 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் 64 ஆயிரத்து 968 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் போகிறது எனக் கூறினார்.
மேலும், 28 வகையான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மொத்த முதலீட்டின் மதிப்பு 51 ஆயிரத்து 157 கோடியாகும். இதன் மூலம் 41 ஆயிரத்து 835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் நிம்மதியாக தொழில் நடத்தலாம் என்ற நம்பிக்கை தொழிலதிபர்களுக்கு வந்துள்ளது. இதன் காரணமாகத்தான் ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. தொழிலதிபர்களுக்கு அன்பான வேண்டுகோள் என்றால் நீங்கள் மட்டும் தொழில் தொடங்கினால் போதாது, உங்களைப் போன்றவர்களையும் தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என வலியுறுத்தினார்.