சென்னை: கூட்டாட்சிக்கு எதிரான மற்றும் நடைமுறைக்கு மாறான 'ஒரே நாடு ஒரே தேர்தல்', ஜனநாயகத்தை அழித்துவிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என மத்திய பாஜக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், மத்திய அமைச்சரவை 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்த மசோதாவுக்கு டிசம்பர் 12ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம், தேர்தல் செலவு மற்றும் அரசியல் இடையூறுகள் குறைக்க முடியும் என இந்த மசோதாவை ஆதரிக்கும் பாஜக, பிஜூ ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவிற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
ஜனநாயகத்தை அழித்துவிடும் :இந்த நிலையில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, "கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மற்றும் நடைமுறைக்கு மாறான ஒரே நாடு ஒரே தேர்தலை இந்தியா கூட்டணி வண்மையாக எதிர்கிறது. ஏனென்றால், இவை சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும். மேலும், நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்தை முற்றிலும் அழித்துவிடும்.