தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரி தொப்பூர் விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு; முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

Dharmapuri Thoppur Accident: தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.

Chief Minister Stalin condoles the victims of Dharmapuri Thoppur Accident
தருமபுரி தொப்பூர் கணவாய் விபத்து

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 10:25 AM IST

தருமபுரி:தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரி தொப்பூர் கணவாய் பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து 2 லாரிகள், 2 கார் மீது மோதியது.

அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதிக் கொண்ட இந்த விபத்தில் லாரிக்கு அடியில் சிக்கிய கார் தீப்பிடித்து லாரியும் தீப்பிடித்தது. மேலும் ஒரு லாரி பாலத்தில் இருந்தும் விழுந்தது. இந்த கோர விபத்தில் காருக்குள் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கார் தீப்பற்றியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த 8 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த செய்திக் குறிப்பில், "தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் உள்வட்டம் தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் 24-1-2025 மாலை 5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சாலை விபத்தில் கோயம்புத்தூர், டவுன்ஹால், அசோக் நகரைக் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சு (56), விமல் (28), அனுஷ்கா (23), ஜெனிபர் (29) ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர் என்றும், இவ்விபத்தில் 8 நபர்கள் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் இதுபோன்று தொடர் விபத்துகள் நடப்பதால் தான் உயர்மட்ட விரைவு சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை டேக் செய்து தருமபுரி எம்பி செந்தில்குமார் விபத்தின் சிசிடிவி வீடியோக்களை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தொப்பூரில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து...3 பேர் உயிரிழப்பு! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details