சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 2வது வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதேபோல் இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்து, ஆலோசனை நடத்துவதற்காக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் மூன்று துணை தேர்தல் ஆணையர்கள் ஆகிய நான்கு பேர் கொண்ட குழுவினர் நேற்று (பிப்.22) இரவு சென்னை வந்தடைந்தனர். தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இன்றும், நாளையும் ஆய்வு செய்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
டெல்லியில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர்களை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் வரவேற்றனர். அதன் பின்பு தேர்தல் ஆணையர்கள் இன்று (பிப்.23) காலை 11 மணியில் இருந்து, பகல் ஒரு மணி வரையில், மீனம்பாக்கத்தில் நட்சத்திர ஹோட்டலில், தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை நேரடியாக சந்தித்து, நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவர்களின் கருத்துக்களை கேட்டு அறிகின்றனர்.
பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களை மீனம்பாக்கம் நட்சத்திர ஹோட்டலுக்கு நேரடியாக வரவழைத்து, மாவட்டங்களில் நாடாளுமன்ற தேர்தல் ஆயத்தை ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். அதேபோல் நாளை (பிப்.24) காலை 9 மணியில் இருந்து 11 மணி வரையில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.