சென்னை: நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கான முழு வீச்சில் இறங்கி உள்ளது. அந்த வகையில், தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று ஆய்வுப் பணியில் ஈடுபடுகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் தேர்தல் ஆயத்த ஏற்பாடு பணிகளை நேரடியாக ஆய்வு செய்வதற்காக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினர், கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதியிலிருந்து 10ஆம் தேதி வரை 3 நாட்கள் சென்னையில் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால், தமிழகத்தில் அப்போது ஏற்பட்ட பெருவெள்ளம், மழை, புயல் பாதிப்பு காரணமாக அந்த கூட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்திய தலைமைத் தேர்தல் துணை ஆணையர் அஜய் பாது, இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் ஆகியோர் இன்றும், நாளையும் சென்னையில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கின்றனர்.