டெல்லி:இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக உள்ள ஆனந்த நாகேஸ்வரனின் பதவிக்காலம் நிறைவு பெற இருந்த நிலையில் அவரது பதவிக்காலம் மார்ச் 2027 வரை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான ஆனந்த நாகேஸ்வரன் கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவரது பதவிக்காலமான மூன்று ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் அவரது பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்துள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த நிதி ஆண்டின் பொருளாதார ஆய்வில் 6.3 - 6.8 சதவீத வளர்ச்சியைக் கணித்த சில வாரங்களுக்குப் பிறகு இது குறித்த தகவல் வெளியான நிலையில் நேற்று (பிப்.20) வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு (ACC) இந்த அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி மார்ச் 31, 2027 வரை இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நாகேஸ்வரனின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த ஆனந்த நாகேஸ்வரன்?நாகேஸ்வரன் அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் முதுகலை (MBA) பட்டம் பெற்றவர். அவர் 1994 ஆம் ஆண்டு மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பரிமாற்ற விகிதங்கள் குறித்த ஆராய்ச்சி செய்து நிதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். இதையடுத்து, இவர் (IFMR) கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் டீனாகவும், க்ரியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தின் புகழ் பெற்ற கௌரவ பேராசிரியராகவும் இருந்தார். மேலும் இவர் 2019 முதல் 2021 வரை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் பகுதி நேர உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள பல வணிகப் பள்ளிகள் மற்றும் மேலாண்மை நிறுவனங்களில் பேராசிரியராக பணியாற்றியதோடு, நிதித்துறை தொடர்பாக பல நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க:”உங்களுக்கு ஹிந்தி மட்டும் தான் தெரியும்”... மும்மொழிக் கொள்கைக்கு எதிராக நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து!
தலைமைப் பொருளாதார ஆலோசகரின் பணி: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பொருளாதார ஆய்வறிக்கையை உருவாக்குவது. நாட்டின் பொருளாதார நிலை குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவது தலைமைப் பொருளாதார ஆலோசகரின் முக்கிய பொறுப்புகளாகும். மேலும் பொருளாதார துறையில் உள்ள அதிகாரிகள் நிதிநிலை அறிக்கை மற்றும் இந்தியாவின் பொருளாதார தேவைகள் குறித்து ஆராய்ச்சி மற்றும் ஆய்வு நடத்துவதும் குறிப்பிடத்தக்கது.