சென்னை:நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊரப்பாக்கத்தில் தங்கி சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 7) காலை நெல்லையிலிருந்து, ரயிலில் தாம்பரம் வந்த அந்த இளைஞர் தான் தங்கி இருக்கும் அறைக்குச் செல்வதற்காகத் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்தில் ஏறியுள்ளார்.
இதனையடுத்து அந்த பேருந்து நடத்துநரிடம் ஊரப்பாக்கம் செல்ல வேண்டும் என 200 ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்டிருக்கிறார். அதற்கு நடத்துநர் சில்லறை இல்லை எனக் கூறி டிக்கெட் தர மறுத்திருக்கிறார். நீண்ட நேரமாக தன்னிடம் வேறு பணம் இல்லை, 200 ரூபாய் தான் இருக்கிறது என இளைஞர் டிக்கெட் கேட்டபடி வந்ததாக தெரிகிறது.
ஆனால் அதற்குள் ஊரப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வந்ததால் மீண்டும் 200 ரூபாய் கொடுத்து டிக்கெட் கொடுங்கள் எனக் கேட்ட பொழுது இளைஞரை நடத்துநர் ஆபாசமாகப் பேசி அடிக்கப் பாய்ந்துள்ளார். இதைப் பார்த்த மற்ற பயணிகள் நடத்துநரைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இந்த காட்சியைப் பதிவு செய்த இளைஞர் இதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.