சென்னை:சென்னை மாநகரின் வாகனம் சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்களை குறைக்கும் பொருட்டு, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, சமூக விரோதிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ஹவாலா பணப் பரிமாற்றத்தில் போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர், தங்களது வாகனங்களில் போலீஸ், ஊடகம், தலைமைச் செயலகம், டி.என்.இ.பி என ஸ்டிக்கர் ஒட்டி தப்பிப்பதாக தகவலறிந்த போக்குவரத்து காவல்துறையினர், முதற்கட்டமாக வாகனப் பதிவு எண் தகட்டில், ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களை மடக்கி சோதனை செய்தனர்.
கடந்த 5 நாட்களில், அதாவது மே 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி மாலை வரை நடத்திய சோதனையில் 1,200 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி வாகனப் பதிவு எண் தகட்டில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததாக 1,022 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து, தலா ரூ.500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.