சென்னை: சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்றிரவு 10:30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டும். வழக்கமாக அந்த விமானம், இரவு 8.30 மணிக்கு துபாயில் இருந்து வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து துபாய்க்கு, புறப்பட்டுச் செல்லும்.
புறப்படத் தயாரான விமானம்:இந்நிலையில், நேற்றிரவு இந்த விமானத்தில் 362 பயணிகள் சென்னையிலிருந்து செல்ல இருந்தனர். அவர்கள் அனைவரும் இரவு 8 மணிக்கு முன்னதாக சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, துபாயிலிருந்து விமானம் சென்னை வந்ததும் விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டனர்.
இயந்திர கோளாறு:இதன்படி,இரவு 10:30 மணிக்கு விமானம் ஓடுபாதையில் ஓட தயாரானது. அதற்கு முன்னதாக விமானி, விமானத்தின் இயந்திரங்களை சரிபார்த்தார். அப்போது விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், விமானத்தை இயக்கினால் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்துள்ளார்.
விமானம் ரத்து:இதனையடுத்து, விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. விமானப் பொறியாளர்கள், விமானத்துக்குள் ஏறி விமானத்தின் இயந்திரங்களை சரிபார்த்தனர். அதோடு, விமானம் காலதாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், நள்ளிரவைக் கடந்தும் விமானத்தின் இயந்திரங்கள் சரி செய்ய முடியவில்லை என்பதால், துபாய் செல்ல வேண்டிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்கவைக்க அனுப்பி வைக்கப்பட்டனர். சில பயணிகள், வேறு தேதியில் பயணம் செய்வதாக பயண தேதியை மாற்றி வாங்கிக் கொண்டு, புறப்பட்டுச் சென்று விட்டனர்.
இந்த விமானம் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை மீண்டும் துபாய்க்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறை தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, 362 பயணிகள், 14 விமான ஊழியர்கள் உட்பட 376 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
இதையும் படிங்க:ஒரே நேரத்தில் சிக் லீவில் சென்ற ஊழியர்கள்.. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீர் ரத்து! - Air India Express Flights