கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர் சந்திப்பு சென்னை:தனியார் பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்த நபரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் எனவும் சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் இன்று (பிப்.08) வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர், பள்ளிகளில் தீவிர சோதனை நடத்தினர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர சென்னை காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகர கூடுதல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களைச் சந்தித்தார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “வட சென்னையில் உள்ள சில பள்ளிகள் மற்றும் ராயப்பேட்டை முகப்பேரில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
13 பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படவில்லை. மிரட்டல் குறித்து காலை 10.30 மணி அளவில் முதல் தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு Bomb Detection and Deactivation Squad அனுப்பப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் யாரும் பதற்றமடைய தேவையில்லை.
மெயில் அனைத்தும் ஒரே இமெயில் ஐடியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரித்ததில், அது ஒரு புரளி என தெரிய வந்துள்ளது. இமெயில் அனுப்பிய நபரைக் கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டல், தேர்வு பயத்திற்காக விடுக்கப்பட்டதை போலத் தெரியவில்லை. மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் பெரும்பாலும் இன்று எந்த தேர்வும் நடைபெறவில்லை. இதுவரை பயப்படுவது போல் எந்த ஒரு பொருளும் கண்டுபிடிக்கவில்லை. அதனால் யாரும் பதற்றம் அடைய வேண்டாம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:'மக்கள் பீதி அடைய வேண்டாம்'- தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து காவல் துறை விளக்கம்!