சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 16 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டிருந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி, செந்தில் பாலாஜியின் தரப்பில், அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், "தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரமில்லை. எனவே, தன்னை விடுவிக்க கோரிய மனுவின் மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, குற்றச்சாட்டுகள் பதிவை தள்ளிவைக்க வேண்டும்" இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், குற்றச்சாட்டு பதிவு செய்யும் நடைமுறை, மேற்கொள்ளப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மனுவின் மீதான விசாரணை, சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி, டி.வி.ஆனந்த் முன்பாக இன்று (பிப்.20) விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, "இந்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:வேளாண் பட்ஜெட்டில் முக்கனி மேம்பாட்டு சிறப்புத் திட்டம் அறிவிப்பு - முழு விவரம்!