சென்னை:பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் அமைப்பு ஒன்று பலதரப்பட்ட 100 பெண்களை சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் சுமார் ஒரு மணி நேரம் வானில் பறக்க வைத்து, மீண்டும் சென்னை விமான நிலையத்திலேயே தரையிறங்கும் வகையில் ‘செக்யூர் அவர் சிட்டி’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த நிகழ்ச்சியின் அங்கமாக, சென்னை மாநகரம் முழுவதும் 10,000 சிசிடிவி கேமராக்கள் தனி நபர்களின் வீடுகளில் பொருத்துவதற்கான தொடக்க நிகழ்ச்சியும் விமானத்திலேயே நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா, நடிகர் நரேன், நடிகை பாவனா உள்பட ஆட்டோ ஓட்டும் பெண்கள், கூலி தொழிலாளி பெண்கள் என 100 பேர் விமான பயணம் மேற்கொண்டனர்.
நடிகை பாவனா, நடிகர் நரேன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் நடிகை பாவனா செய்தியாளர்களிடம் கூறுகையில், “விமானத்தில் சென்று ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடக்கி வைப்பது இதுதான் முதல்முறை. இந்த அமைப்பின் முயற்சி பாராட்டத்தக்கது. நகர்ப்புற கட்டமைப்பு பகுதிகளில் பெண்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளின் பாதுகாப்பிலும் சிசிடிவி கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதையும் படிங்க:பைக் டாக்சி: மத்திய அரசுடன் இணைந்து முடிவெடுக்க வேண்டும் - அமைச்சர் சிவசங்கர்!
இந்த அமைப்பின் சார்பில் 10,000 சிசிடிவி கேமராக்களை தனிப்பட்ட முறையில் வீடுகளில் பொருத்த உள்ளனர். இந்த முயற்சியால் மிகுந்த பாதுகாப்புப் பயன் இருக்கும் என நம்புகிறேன். அனைத்து மக்களுக்கும் இது உதவிகரமாக இருக்கும்” என்றார்.
இதையடுத்து, பாவானாவிடம் அவர் நடிப்பில் தயாராகும் படங்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அவர், “மலையாளத்தில் இரண்டு திரைப்படங்கள், கன்னடத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழில் நல்ல படங்கள் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார், அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகர் நரேன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “சென்னை மக்களின் பாதுகாப்புக்காக 10,000 கேமிராக்கள் வழங்கப்படுகிறது. குற்றம் நடந்ததும் சிசிடிவி கேமிரா பதிவை கேட்கிறார்கள். அந்த வகையில் இந்த கேமிராக்கள் உதவிகரமாக இருக்கும்” என்றார்.
இதையடுத்து நடிகர் மற்றும் தவெக தலைவரான விஜய்யின் தளபதி 69 படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தளபதி 69 படப்பிடிப்பு நன்றாக செல்கிறது. விஜய் தமிழ் சினிமாவை விட்டு செல்வது கஷ்டமாக உள்ளது. விஜய் அரசியலில் சாதிக்க நினைக்கிறார். அவருக்கு ஆதரவாக இருப்போம்” என்றார்.