சென்னை:செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை நவம்பர் 15ஆம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு தள்ளிவைத்துள்ளது.
செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று (நவ.7) நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகியிருந்தார். செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் புதிதாக மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
ஆனால், குறுக்கு விசாரணைக்காக சாட்சிகள் ஆஜராகியுள்ள நிலையில், விசாரணையை எப்படி ஒத்திவைப்பது? என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், விசாரணையை பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்க எதிர்ப்பு தெரிவித்தார். அதனையடுத்து, மூத்த வழக்கறிஞர் ஆஜராக அனுமதி அளித்த நீதிபதி, விசாரணையை நவம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன், இந்த வழக்கில் மேற்கொண்டு அவகாசம் கேட்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: களம் புறம்போக்கு பகுதியில் சூப்பர் மார்க்கெட்? - மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!