சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இதனையடுத்து, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு பதிவை தொடங்கியது.
இந்த குற்றச்சாட்டு பதிவின் போது, தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் காழ்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்கு என்றும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புவதாகவும் தெரிவித்திருந்ததார். இந்நிலையில், சாட்சிகளின் குறுக்கு விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று தொடங்கியது.
அப்போது இந்த வழக்கில் முதல் சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ள அப்போதைய கரூர் சிட்டி யூனியன் வங்கியின் தலைமை மேலாளர் ஹரிஷ்குமார் நேரில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் குறுக்கு விசாரணை நடத்தினார். அதற்கு செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா மற்றும் சகோதரர் அசோக் குமாரின் வங்கிக் கணக்குகள் தொடர்பான விவரங்களை சாட்சிக் கூண்டில் நின்றவாறு பதிலளித்தார்.