தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2 வயதில் காணாமல் போன குழந்தை 14 வயதில் எப்படி இருப்பார்?.. ஏஐ மூலம் தேடும் காவல்துறை! - Missing Child AI - MISSING CHILD AI

Child Missing case: சென்னையில் 13 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன குழந்தை தற்போது எப்படி இருப்பார் என செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) மூலம் புகைப்படத்தை உருவாக்கி, சிறுமியைக் கண்டுபிடிக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

image of girl created by AI
ஏஐ உருவாக்கிய சிறுமியின் தற்போதை படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 21, 2024, 4:59 PM IST

சென்னை:கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த கணேஷ் - வசந்தி என்ற தம்பதியிக்கு பிறந்த இரண்டு வயது பெண் குழந்தை கவிதா, வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென மாயமாகியுள்ளார். அக்கம்பக்கத்தில் தேடியும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால், பெற்றோர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, குழந்தையைக் கண்டுபிடிக்க பல்வேறு விதமாக முயற்சித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், காவல்துறை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே வந்துள்ளது. இந்த நிலையில், பெற்றோர் அப்போதைய காவல்துறை ஆணையராக இருந்த ஜே.கே.திரிபாதி கவனத்திற்கு கொண்டுபோய் உள்ளனர். இதனையடுத்து, குழந்தை காணாமல் போன வழக்கை மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்ற உத்தரவு பிறப்பித்தார்.

மத்திய குற்றப் பிரிவிற்கு மாற்றப்பட்டும் பல விசாரணை அதிகாரிகள் மாற்றமடைந்தார்களே தவிர குழந்தையை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையே நிலவியதாக பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் தான், கடந்த 2022ஆம் ஆண்டு இந்த வழக்கு முடித்து வைக்கப்பட இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கும் பொழுது, பெற்றோர் 2023 பிப்ரவரி மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கை முடித்து வைக்க விருப்பமில்லை என மனுத்தாக்கல் செய்தனர். அதன் பின், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குழந்தையின் தந்தை கணேஷ் தொடர்ந்த மனு மீதான விசாரணையின் அடிப்படையில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.

அதில் இன்னும் ஆறு மாதத்திற்கு குழந்தையை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவின் கூடுதல் துணை ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கமான பாணியில் தேடுதலை ஆரம்பிக்காமல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குழந்தையை கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளனர்.

2011ஆம் ஆண்டு காணாமல் போன இரண்டு வயது குழந்தையின் புகைப்படத்தை வைத்து புதிய யுக்தியில் காவல்துறையினர் தேடுதல் பணியை ஆரம்பித்தனர். காணாமல் போன கவிதாவின் ஒரு வயது மற்றும் இரண்டு வயது புகைப்படத்தைப் பயன்படுத்தி 13 வருடம் கழித்து எவ்வாறு இருப்பார் என செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் (AI) பயன்படுத்தி குழந்தையின் புகைப்படத்தை உருவாக்க ஆரம்பித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், தமிழக காவல் துறை சைபர் நிபுணர்களைப் பயன்படுத்தி 14 வயதில் கவிதா எவ்வாறு இருப்பார் என புகைப்படம் ஒன்றை வடிவமைத்துள்ளது. இவ்வாறு ஏஐ மூலம் உருவாக்கிய புகைப்படத்தை பெற்றோரான கணேசன் மற்றும் வசந்தியிடம் காட்டும் பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு மூலம் 14 வயது தோற்றத்தில் உள்ள காணாமல் போன குழந்தை கவிதாவின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கு அனுப்பியும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் குழந்தையைக் கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி இருப்பதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவு காவல் துறை அதிகாரிகள் பெற்றோருக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:“2047ல் இந்தியர்களை நிலவில் இறக்கி மீண்டும் கொண்டுவர திட்டம்” - ஆசீர் பாக்கியராஜ் தகவல்! - IPRC DIRECTOR ASIR PACKIARAJ

ABOUT THE AUTHOR

...view details