சென்னை: சென்னை தியாகராய நகர் பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுவன், 13 வயதான தன் தங்கைக்கு, மூன்று ஆண்டுகளாக தன் தந்தை பாலியல் தொந்தரவு அளித்து வருவதாக, கடந்தாண்டு தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய அனைத்து மகளிர் காவல்துறையினர், மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு எதிராக, போக்சோ (POCSO) சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.ராஜலெட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ராஜலெட்சுமி, "சிறுமியின் தந்தை மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் செலுத்த வேண்டும் எனத் தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்குப் பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியத்தில் இருந்து ரூ.20 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும், அத்துடன் அபராத தொகையையும் சேர்ந்து வழங்க வேண்டும்" எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: நாமக்கல் சிக்கன் ரைஸ் விவகாரத்தில் திருப்பம்.. பூச்சி மருந்து கலந்ததாக ஆய்வில் தகவல்! - Namakkal Chicken Rice Issue