சென்னை:சென்னையில் இன்று (அக்டோபர் 15) காலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கையின் படி, சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் மிககனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரியில் உள்ள மேம்பாலங்களில் இரண்டாவது நாளாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. வேளச்சேரி பொதுவாகவே தாழ்வான பகுதி என்பதால் தங்கள் கார்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கையாக பாலங்களின் மீது நிறுத்தி வைத்துள்ளனர். நேற்று (அக்.14 ) பிற்பகல் முதலே பாலத்தின் மீது கார்களின் அணிவகுப்பு தொடங்கியது. மேம்பாலத்தில் நிறுத்திய கார்களுக்கு போலீசார் அபாராதம் விதித்ததாக காட்சிகள் பரவின. இது தொடர்பாக பேசிய பொதுமக்கள் அபராதத்தைக் காட்டிலும் கார்கள் வெள்ளத்தில் சேதமடைந்தால் கூடுதல் செலவு வைக்கும் என்பதால் அபராதம் செலுத்த தயாராக இருப்பதாகக் கூறினர்.
பாலத்தில் நிறுத்தினால் அபராதம் இல்லை:இதனையடுத்து தமிழ்நாடு காவல்துறை சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், பாலங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்காக அபராதம் விதிக்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் நகர காவல்துறைக்கும் இதற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு உதவுமாறும், வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்த பொதுமக்களுக்கு உதவுமாறும் போலீசாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறையை +91 94981 81500 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
தயார் நிலையில் காவல்துறை: இன்று அதிகனமழையும் , நாளை ரெட் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளதால், சென்னையில் மீட்புப் பணிகளுக்காக காவல்துறை தயார் நிலையில் உள்ளது. மழைநீர் தேங்குவதால் பாதிக்கப்படும் 50 இடங்களை கண்டறிந்து, அந்த பகுதிகளில் தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் சென்னை காவல் துறையில் ஆயுத படையில் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 300 காவலர்களும் இந்த மீட்பு பணியில் ஈடுபட தயாராக உள்ளதாகவும், இவர்கள் சென்னை மாநகரத்தில் உள்ள 12 காவல் மாவட்டத்திற்கும் பிரித்து அனுப்பப்பட்டு மீட்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க :மழை எச்சரிக்கைகள்: மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு எச்சரிக்கைகள் என்ன சொல்லுகிறது?
தாம்பரத்திற்காக தயாரான படகுகள்:வெள்ள அபாயத்தில் இருக்கும் தாம்பரம் மாநகராட்சிப் பகுதிகளில் மீட்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 படகுகள் மற்றும் 10 மீனவர்கள் கோவளத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். அடையாறு ஆறு அருகே உள்ள சசிவரதன் நகர், சமத்துவ பெரியார் நகர், சிடிஓ காலனி, கிஷ்கிந்தா சாலை, அமுதம் நகர், கன்னட பாளையம், அருள் நகர் போன்ற பகுதிகள் வெள்ள அபாயம் மிக்கவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் இப்பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் தற்போது படகுகள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்ட படகுகளை தாம்பரம் மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர் காமராஜ் நேரில் ஆய்வு செய்தார். மீட்புப்பணிக்காக அழைத்துவரப்பட்ட மீனவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதே போன்று வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை தாம்பரம் ரயில்நிலையத்தில் நிறுத்திக் கொள்ள இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
விமான நிலையமும் தயார்: சென்னை விமான நிலையத்தில் கனமழை யின்போது விமானங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்து விமான நிலைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தற்போது வரை விமான சேவைகளில் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. நேற்று காலை 9 மணியிலிருந்து, மாலை 3 மணி வரையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு விமானங்கள் 34 விமானங்கள் சுமார் 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றுள்ளன. இதில் சிங்கப்பூர், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட 5 சர்வதேச விமானங்கள், 29 உள்நாட்டு விமானங்கள் அடங்கும்.
சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களில் பயணிகளின் உடமைகளை ஏற்றுவது, உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவைகள் விமானங்களில் ஏற்றுவது, போன்றவைகள் தாமதம் ஆவதால், இந்த விமானங்கள், தாமதமாக புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அங்கு வானிலை நிலவரத்தை கேட்டு அறிந்து அதற்கு ஏற்ப விமானங்கள் புறப்பட்டு செல்வதால் புறப்படும் விமானங்களில் தாமதம் ஏற்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.
மேலும் ஏ டி ஆர் எனப்படும் சிறிய ரக விமானங்கள் சூறைக்காற்று நேரங்களில் வானில் பறப்பது பாதுகாப்பு இல்லாதது. எனவே அதைப் போன்ற சிறிய விமானங்களும் பாதுகாப்பு கருதி சென்னை விமான நிலையத்திலிருந்து தாமதமாக புறப்பட்டு செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விமானங்கள் சென்னையில் இருந்து புறப்படும் போது வந்து தரையிறங்கும் போது ஓடு பாதைகளில் விமானங்கள் ஓடும் போது ஒடு பாதைகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அதோடு அனைத்து விமானங்களையும் குறித்த நேரத்தில் பாதுகாப்பாக இயக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உஷார்படுத்தப்பட்ட பள்ளிகல்வித்துறை:கனமழை நாட்களின் போது பள்ளிகளில் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பதிவேடுகளை பாதுகாப்பாக வைக்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில்,
வானிலை மைய எச்சரிக்கையைத் தொடர்ந்து 15 ந் தேதி முதல் 17 ந் தேதி வரை சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட மழைப் பொழிவின் போது சில பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் முக்கியமான பதிவேடுகள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் மழையினால் சேதமடைந்தது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாக பள்ளி மற்றும் அலுவலகங்களில் உள்ள முக்கியமான பதிவேடுகள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பிற முக்கியமான பொருட்களை தரைத்தளங்களில் வைக்க வேண்டாம் எனவும், முதல் தளத்தில் அல்லது பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்ள அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
பள்ளிகளில் கனமழையால் நீர் தேங்கும் காலங்களில் நீர் இறைக்கும் இயந்திரம் (மின்மோட்டார்) வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இதர அலுவலகங்களில் தயார் நிலையில் உள்ளதா என்பதை தலைமையாசிரியர்கள்
உறுதி செய்து வைத்தல் அவசியம் எனவும் அவர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
என்ன சொல்கிறார் அமைச்சர்?:கடந்த கால அனுபவங்களிலிருந்து இந்தமுறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த கால அனுபவத்தை வைத்து இந்த முறை பணி செய்து வருகிறோம், நிவாரண முகாம்களில் பால், பிஸ்கெட், உள்ளிட்டவைகள் தயாராக வைத்து உள்ளோம், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது, தண்ணீர் வெளியேற்றும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைத்து உள்ளோம், மக்களுக்கு எந்த சிரமம் இல்லாமால் அரசு அனைத்து நடவடிக்கை எடுத்து உள்ளது என கூறினார்.
990 இடங்களில் மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளது, மாநகராட்சி ஊழியர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார். சுரங்கப்பாதைகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், மெட்ரோ பணிகள் மற்றும் இரயில்வே மேம்பாலப் பணிகளால் மழைநீர் தேங்கும் அபாயம் உள்ளதால், அங்கு அதிக அளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் சென்னை மெட்ரோ ரயில்களின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.