சென்னை:சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை நகரம் முழுவதும் 116,1 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்களுடன் இரண்டாம் கட்ட திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது. வழித்தடம் 3-இல், கிரீன்வேஸ் நிலையத்திலிருந்து அடையாறு சந்திப்பு நிலையம் வரையிலான சுரங்கப்பாதை பணிகள் பிப்ரவரி 2023-இல் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு சுரங்கப்பாதையின் நீளமும் 1228 மீட்டர் ஆகும்.
இந்நிலையில் இந்த வழித்தடம் 3-இல் இருக்கும் சுரங்கப்பாதைகள் அடையாறு ஆற்றின் கீழ் 300 மீட்டர் நீளத்திற்கு, 10-13 மீட்டர் தரைமட்டத்திற்கு கீழ் செல்கின்றன. காவேரி மற்றும் அடையாறு என்ற இரண்டு பூமி அழுத்த சமநிலை (Earth Pressure Balancing - EPB) சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் காவேரி சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு அடையாறு நிலையத்தை வந்தடைந்தது.
இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம், சுரங்கத்தின் அடிப்பகுதி பாறை மற்றும் மேற்பகுதி மணல் போன்ற கலப்பு புவியியல் நிலைமைகளைக் கடந்து வந்துள்ளது. மேலும் அடையாறு ஆற்றின் சில பகுதிகளின் கீழ் கடினமான பாறைகளின் வழியாகவும் சுரங்கப்பாதையை அமைத்தது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் முகப்பில் உள்ள வெட்டும் கருவிகள் 65 முறை சீரமைக்கப்பட்டு சுரங்கம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளுக்கு மட்டும் 178 நாட்கள் தேவைப்பட்டது.