சென்னை: வடதமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழையும், காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழையும் பதிவாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: புதுக்கோட்டை 10செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; தஞ்சாவூர் 9செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் 8செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; சென்னை மற்றும் திருவண்ணாமலை 7செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; பெரம்பலூர் மற்றும் திருவள்ளூர் 6செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; செங்கல்பட்டு 6செ.மீ முதல் 2செ.மீ வரையிலும்; வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருச்சி 5செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; விருதுநகர் 5செ.மீ முதல் 2செ.மீ வரையிலும்; மதுரை, சேலம், திருவாரூர், கள்ளக்குறிச்சி 4செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; மயிலாடுதுறை 4செ.மீ வரையிலும் மழையின் அளவு பதிவாகியுள்ளது.
அதேபோல, கடலூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், நாமக்கல் மற்றும் ஈரோடு 3செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; திண்டுக்கல் 3செ.மீ முதல் 2செ.மீ வரையிலும்; கரூர் 3செ.மீ வரையிலும்; சிவகங்கை 2செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; ராமநாதபுரம், தர்மபுரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 1செ.மீ அளவும் மழை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சமவெளிப்பகுதிகளில் பதிவான வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலையாக கரூர்பரமத்தி மற்றும் மதுரை விமானநிலையம் பகுதிகளில் 38.5 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக ஈரோடு மாவட்டத்தில் 18.0 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆக.7) முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல, இன்று (ஆக.7) ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.