சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. மேலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு: வால்பாறை PTO 31 செ.மீ; சின்னக்கல்லார் மற்றும் உபாசி TRF AWS 24 செ.மீ; சின்கோனா மற்றும் விண்ட் வொர்த் எஸ்டேட் 23 செ.மீ; பந்தலூர் மற்றும் தேவாலா 20 செ.மீ; வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் மற்றும் சோலையார் 19 செ.மீ; அவலாஞ்சி 18 செ.மீ; மேல் கூடலூர் மற்றும் கூடலூர் பஜார் 17 செ.மீ; பார்வூட் 14 செ.மீ; செருமுள்ளி மற்றும் வூட் பிரையர் எஸ்டேட் 12 செ.மீ; மேல் பவானி 10 செ.மீ; மக்கினம்பட்டி மற்றும் சிறுவாணி அடிவாரம் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இதுமட்டும் அல்லாது, நீலகிரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திருவள்ளூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் சுமார் 6 செ.மீ முதல் 1 செ.மீ வரையிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சமவெளிப்பகுதிகளில் பதிவான வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலையாக தொண்டியில் 38.6 டிகிரி செல்சியசும்; குறைந்தபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 18.5 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜூலை 30) மற்றும் நாளை (ஜூலை 31) தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அனேக இடங்களிலும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
அதேபோல, இன்று (ஜூலை 30) நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்; தேனி மற்றும் தென்காசி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; திருப்பூர், திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளைய தினம் (ஜூலை 31) நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும்; திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இவற்றை தவிர்த்து, ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் 2ஆம் தேதி வரை நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.