சென்னை:சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையில் மாநகராட்சியில் பணிபுரியும் 12 ஆயிரம் மாநகராட்சி ஊழியர்களுக்கு இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னை மேயர் பிரியா பேட்டி (Video Credits - ETV Bharat Tamilnadu) அந்த வகையில் இன்று (செப் 10) ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள நீரிழிவு நோய் பிரிவின் மூன்றாம் தளத்தில் இந்த முழு உடல் பரிசோதனை செய்யப்படுவதை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 30 மாநகராட்சி பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர், "சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டில் அறிவிப்பு எண் 44ன் படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை மாநகராட்சி சார்பாக வழங்கப்படும் என்று அறிவிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வகையான பணியாளர்களான 11,931 பணியாளர்களுக்கு சிறுநீரக ரத்த பரிசோதனை, தைராய்டு பரிசோதனை, ரத்த சர்க்கரை பரிசோதனை, ரத்த வகை கண்டறிதல், எச்ஐவி பரிசோதனை, கண் பரிசோதனை, காது பரிசோதனை உள்ளிட்ட 16 வகையான பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.
35 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. பெண்களுக்கு முக்கியமாக இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. கூடுதல் சிகிச்சை தேவைப்பட்டால் அரசின் திட்டங்கள் அதிகம் உள்ளன. அந்தத் திட்டங்கள் மூலம் ஒன்றிணைத்து சிகிச்சை வழங்கப்படும்.
இதையும் படிங்க :தொலைதூர ரயில்களில் முன்பதிவு இல்லாத கூடுதல் பெட்டிகள்; தெற்கு ரயில்வே அசத்தல் அப்டேட்! - Southern Railway
சென்னையில் வாகன நிறுத்தத்தை பொருத்தவரை கூடுதலாக மூன்று மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மூலம் வாகன நிறுத்தும் பணிகள் கண்காணிக்கப்பட்டு வந்தது. தற்போது விஞ்ஞான ரீதியாக சென்சார் மூலம் வாகன நிறுத்தம் கவனிக்கப்படுவது தொடர்பான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.
டெங்கு காய்ச்சலை பொருத்தவரை நல்ல தண்ணீரில் உருவாகும் கொசுவால் ஏற்படுகிறது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 87 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டை விட இந்த ஆண்டு பாதிப்பு குறைவாக உள்ளது.
மழைநீர் வடிகால் பணிகள் கொசஸ்தலை ஆறு பணிகள் 80% நிறைவடைந்துள்ளது. அதேபோல் கோவளம் பணிகளும் நடைபெற்று வருகிறது. பொதுமக்களும் தங்கள் வீட்டில் பயன்படுத்தும் தண்ணீரை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இம்மாதத்திற்குள் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க அறிவுறுத்தி உள்ளோம். வரவிருக்கும் பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மழைநீர் வடிகால் பணிகளை கொண்டு வருகிறோம். சிதிலமடைந்த பகுதிகளையும் சரி செய்து வருகிறோம்" என மேயர் பிரியா தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்