தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை உணவு திட்டத்தை தனியாருக்கு விடுவது அரசின் முடிவு...சென்னை மேயர் பிரியா விளக்கம்! - CM BREAKFAST SCHEME

காலை உணவுத் திட்டத்தை தயாரிக்கும் பணியை தனியாருக்கு விடுவது ஏன் என்பது குறித்து சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.

காலை உணவு திட்டம், மேயர் பிரியா (கோப்புப்படம்)
காலை உணவு திட்டம், மேயர் பிரியா (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2025, 2:08 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சியின் இந்த ஆண்டின் முதல் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (ஜன.30) ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் திரவியம், ''காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்கக் கூடாது" என எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.

தனியாருக்கு வழங்க என்ன காரணம்?

இதற்கு பதிலளித்த துணை மேயர் மகேஷ் குமார், "தமிழ்நாடு முழுவதுமுள்ள மாநகராட்சியில் காலை உணவு திட்டத்தை தனியார் மூலம் செயல்படுத்துவது அரசின் முடிவு. காலை உணவுத் திட்டத்தில் அம்மா உணவகங்கள் மூலமாக சமைக்கப்பட்டு அனுப்பப்பட்டது. போதிய சமையல் கூடம் இல்லாத காரணத்தினால் தனியாருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சருக்கும், துறை அமைச்சர் கே.என். நேரு கவனத்திற்கும் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்", என்றார்.

மாமன்ற கூட்டம் (credit - ETV Bharat Tamil Nadu)

தவறான புரிதல்

அதனை தொடர்ந்து பேசிய மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், "அரசின் உத்தரவுப்படி தான் டெண்டர் விடப்பட்டுள்ளது. அரசாணையில் தெளிவாக ஒப்பந்தபுள்ளி வழங்கக் கோரி வெளியிடப்பட்டிருக்கிறது. இப்போது வரை சென்னை மாநகராட்சி மூலமாகத் தான் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதில் தவறான புரிதல் இருக்கிறது. இப்போது நாம் செயல்படுத்தக்கூடிய காலை உணவுத் திட்டம் அம்மா உணவகம் மூலமாக நாம் செய்யவில்லை. 356 பள்ளிகளுக்கு 35 இடங்களில் சமைத்து அனுப்பப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு முடிவு

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாநகராட்சி, நகராட்சிகளில் காலை உணவு திட்டத்தை தனியார் மூலம் நடத்த தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது. 2023 டிசம்பரில் டெண்டர் விட ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது" என்றார்.

முடிவுகள் எடுக்கப்படும்

அப்போது பேசிய மேயர் பிரியா, "அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இதுவரை மாநகராட்சி மூலம் காலை உணவு திட்டத்தை நல்ல முறையில் பின்பற்றி வந்தாலும் வரக்கூடிய காலகட்டத்தில் அதற்குரிய முடிவுகள் எடுக்கப்படும். அரசாணையின்படி டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதற்கான முடிவு கலந்து ஆலோசிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details