சென்னை: உலகின் மிக நீளமான கடற்கரையில் இரண்டாவது இடமும், இந்தியாவில் முதலிடமும் பிடித்திருப்பது சென்னை மெரினா கடற்கரை. இத்தகைய சிறப்பு வாய்ந்த மெரினா கடற்கரைக்கு கூடுதல் அங்கீகாரமாக நீலக்கொடி (Blue flag) சான்றிதழ் கிடைக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திடம் பேசுகையில், "சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி கடற்கரை சான்றிதழை பெறுவதற்காகவும், கட்டமைப்பு பணிகளை தொடங்குவதற்காகவும் சென்னை மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரியுள்ளது."
"ஒப்பந்தப்புள்ளி பெறும் நிறுவனம் ஒரு மாதத்திற்குள் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான கட்டமைப்பு பணிகளை முடித்துக் கொடுக்க உள்ளனர். அதன் பின்னர், விண்ணப்பம் செய்து டென்மார் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை குழுவினர் சென்னை மெரினா கடற்கரை முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்து சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி அந்தஸ்து வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று மகேஷ் குமார் தெரிவித்தார்.
நீலக்கொடி பெறுவதற்காக உலகத்தரம் வாய்ந்த வசதிகள் சென்னை மெரினா கடற்கரையில் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், நீலக்கொடி சான்றிதழ் என்றால் என்ன? யார் அந்த சான்றிதழ்களை வழங்குவார்கள்? ஏன் சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் கொடுக்கப்படுகிறது? அதனால் என்ன பயன்? என்பது குறித்து விரிவாகக் காணலாம்.
நீலக்கொடி பட்டியலுக்கு தயாராகும் மெரினா:
நீலக்கொடி சான்றிதழைப் பெற நடைபெறும் கட்டமைப்பு பணிகளுக்காக சென்னை மாநகராட்சி சார்பில் 5.62 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருக்கிறது. இது நவம்பர் 15ஆம் தேதி முடிவடைகிறது.
இந்த ஒப்பந்தப்புள்ளியில் தேர்வாகும் நிறுவனம் நவம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு கட்டமைப்பு பணிகளை தொடங்கி விரைவில் முடித்து நீலக்கொடி சான்றிதழை பெறும் முயற்சியில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது.
நீலக் கொடி திட்டமானது, ஐக்கிய நாடுகளின் சபை குறிப்பிடும் 17 நிலைதன்மை கொண்ட இலக்குகள் (SDGs), நிலையான வளர்ச்சி திட்டங்களை இணைத்து சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. அவை என்ன என்பதை கீழ்வருமாறுக் காணலாம்.
வறுமையை ஒழிக்க: அனைத்து வடிவங்களிலும் வறுமையை முடிவுக்கு கொண்டு வருதல்.
பசி இல்லாத உலகம்: பசியை முடிவுக்கு கொண்டு வருதல், உணவு பாதுகாப்பை அடைதல் மற்றும் நிலைத்தன்மை கொண்ட வேளாண்மையை மேம்படுத்துதல்.
நல்வாழ்வு: அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியமான வாழ்வையும் நலனையும் உறுதி செய்தல்.
தரமான கல்வி: அனைவருக்கும் சமமான மற்றும் தரமான கல்வியை உறுதி செய்தல். தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் மக்களுக்கான கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்துதல்.
பாலின சமத்துவம்: பாலின சமத்துவத்தை பேணுதல். மேலும், அனைத்து பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் அதிகாரமளித்தல்.
தூய்மையான குடிநீர் மற்றும் சுகாதாரம்: அனைவருக்கும் நீர் மற்றும் சுகாதாரத்தின் கிடைக்கும்தன்மையை உறுதி செய்தல்.
மலிவான மற்றும் தூய்மையான ஆற்றல்: சூரிய மின்சக்தி போன்று மலிவான, நம்பகமான, நிலைத்தன்மை கொண்ட மற்றும் நவீன ஆற்றலின் கிடைக்கும்தன்மையை உறுதி செய்தல்.
பொருளாதார வளர்ச்சி: நிலைத்த பொருளாதார வளர்ச்சி, உற்பத்தி திறன் கொண்ட வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை மேம்படுத்துதல்.
புதுமையைப் புகுத்துதல்: புதுமையான மேம்பாட்டுப் பணிகளுக்கு அடித்தளம் இடுதல்.
சமத்துவத்தைப் பேணுதல்: உள்நாட்டிலும், பிற நாடுகளுக்கு இடையிலும் சமத்துவத்தைப் பேணுதல்.