திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் நிகில் குப்தா தலைமையில் தலைமைக் காவலர் செல்வக்குமார் நேற்று (பிப்.2) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் எஸ்எம்விடி எக்ஸ்பிரஸ் ரயில், நடைமேடை 5க்கும் மதியம் 12 மணிக்கு வந்து நின்றது.
பின்னர், மதியம் 12.05 மணிக்கு அந்த ரயில் மீண்டும் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட நிலையில் ஆண் பயணி ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்றார். அப்போது, அவர் நிலை தடுமாறி நடைமேடைக்கும், ரயில் பெட்டிக்கும் இடையில் தவறி விழுவதைப் பாதுகாப்புப் பணியிலிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை தலைமைக் காவலர் செல்வக்குமார் பார்த்துள்ளார்.
இதையடுத்து காவலர் அந்த கணமே லாவகமாகச் செயல்பட்டு, தவறி விழுந்த ஆண் பயணியை உயிரிழப்பு ஏற்படாமல் மீட்டார். பின்னர், இது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நடைமேடையிலிருந்த அவசர மருத்துவச் சிகிச்சை மையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது.