தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“பார்முலா 1 கார் ரேஸில் சில விலங்குகள் வந்தது கூட தெரியாத அறிவாளிகள்..” - அதிமுக மாஜி அமைச்சருக்கு உதயநிதி பதிலடி! - Udhayanidhi on car race success - UDHAYANIDHI ON CAR RACE SUCCESS

Udhayanidhi Stalin on Formula 4 Car Race Success: இரவு நேர பார்முலா 4 கார் பந்தயம் சிறப்பாக நடந்து முடிந்ததற்கு உறுதுணையாக இருந்த அனைத்து அரசுத்துறை பணியாளர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , கார் பந்தயம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , கார் பந்தயம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2024, 4:54 PM IST

சென்னை:சென்னையில் கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரவு நேர பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசுத்துறை பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (செப்.13) சென்னை, சேப்பாக்கம் பகுதியில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, சென்னை மாநகராட்சி, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை, பெருநகர சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் உள்ளிட்ட 14 துறைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு உறுதுணையாக இருந்ததற்கான பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.

இதையும் படிங்க:வலுக்கும் கண்டனம்.. மன்னிப்பு கேட்ட அண்ணாமலை.. அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரத்தில் நடந்தது என்ன?

இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பார்முலா 4 கார் பந்தயம் தொடங்கும் போது இந்த கார் பந்தயம் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் இருந்தது. தற்போது கார் பந்தயம் நடந்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடப்பது வித்தியாசமான அனுபவமாக உள்ளது.

சென்னையில் நடந்த பார்முலா 4 கார் பந்தயத்தை உலகமே பார்த்துக் கொண்டிருந்தது. அனைவரும் பாராட்டுகின்றனர், வாழ்த்து தெரிவிக்கின்றனர். மழைக்காலம் தொடங்கும் முன்பே ஆகஸ்ட் மாதத்திற்குள்ளேயே கார் பந்தயத்தை நடத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார்.

இதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு முக்கியமானது. அதிகாலை, வெயில் என 2 நாட்கள் பந்தய தடத்தை தூய்மையாக வைத்திருந்தனர். போக்குவரத்து காவல்துறையின் பங்கும் முக்கியமானது. நகரின் மையப்பகுதியில் நடத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உருவாகும் சூழல் இருந்தது. போக்குவரத்து நெரிசலை பெரிய செய்தியாக்க வேண்டும் என சிலர் எதிர்பார்த்தனர். சிலர் போட்டியை நிறுத்தக் கூட முயற்சி செய்தனர்.

சின்ன விபத்தைக் கூட ஊதி பெருசாக்க சிலர் காத்திருந்தனர். கார் பந்தயம் நடத்தும் தடத்திற்குள் நாய் வந்த போது நாய் ரேஸா? கார் ரேஸா? என சிலர் விமர்சித்தனர். பார்முலா 1 கார் பந்தயத்திலேயே பந்தய தடத்திற்குள் நாய், முயல், மான் போன்ற விலங்குகள் சென்ற நிகழ்வு கூட தெரியாத அறிவாளிகள்தான் கார் பந்தயம் குறித்து பேசுகின்றனர்.

கார் ரேஸ் நடத்தக்கூடாது என நினைத்தவர்கள் கூட 2வது நாளில் எங்களுக்கும் கார் ரேஸ் பார்க்க பாஸ் வேண்டும் எனக் கேட்டனர்.
பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது என 3 நாட்கள் நடத்த வேண்டிய ரேஸை 2 நாட்களில் நடத்தி முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார்” எனத் தெரிவித்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மெய்யநாதன், டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர மேயர் பிரியா, எம்பி தயாநிதி மாறன், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மெகநாத் உள்ளிட்டோர் உடன் 14 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும், பணியாளர்களும் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details