சென்னை:கேரளாவில் இருந்து நேற்று முன்தினம் சென்னை வந்த விரைவு ரயிலில், கரூரைச் சேர்ந்த சென்னையில் பணியாற்றும் பெண் மென்பொறியாளர் கரூரில் ஏறினார். ரயில் காட்பாடி அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் மென் பொறியாளரின் செல்போனை பிடுங்கிச் சென்றுள்ளனர்.
பெண் மென்பொறியாளர் பின்தொடர்ந்து சென்று தனது செல்போனை கேட்டுள்ளார். அப்போது கழிவறை அருகே நின்று கொண்டிருந்த நபர்கள் மென்பொறியாளரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், அந்த நபர்கள் வேறு பெட்டிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ரயில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்ததும், மென்பொறியாளர் ரயில்வே பாதுகாப்பு படையிடம் நடந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்தார்.
ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயில்வே போலீஸ் உயரதிகாரிகள், மென்பொறியாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பெண் மென்பொறியாளருக்கு மருத்துவப் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மர்ம நபர்களை பிடிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பாக, கரூரிலிருந்து சென்னை சென்ட்ரல் வரை உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்தவர்களின் பெயர், அட்டவணை பட்டியலையும் கேட்டுப் பெற்று அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தி.நகர் குப்பைத் தொட்டியில் தோட்டாக்கள் கிடந்ததால் பரபரப்பு:தியாகராய நகர் முத்துரங்கன் சாலை, வரதராஜன் தெரு சந்திப்பில் சாலை ஓரமாக இருந்த குப்பைத் தொட்டியில் உள்ள குப்பைகளை எடுத்துச் செல்ல, ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் எடுக்க வந்தனர். ஒப்பந்த தூய்மைப் பணியாளர் திருநாவுக்கரசு குப்பைகளை எடுக்கையில், குப்பைத் தொட்டியின் அடியில் 14 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் 7 காலி தோட்டாக்கள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.