சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு கல்லூரிகளின் மாணவ, மாணவிகளிடையே தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் குறித்த புதிர் போட்டி நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான ஜெ.ராதாகிருஷ்ணன் துவங்கி வைத்தார்.
அப்போது மாணவர்களிடையே பேசிய ஆணையர் ராதாகிருஷ்ணன், "சென்னையில் 10-ல் 4 பேர் வாக்களிப்பது இல்லை. இது பெருமைக்குரிய விஷயமா? வாக்களிப்பது குறித்துக் கடந்த முறை 18 வகையான விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். இந்த முறை 21 வகையான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்.
நாளை தமிழ்ப் புத்தாண்டு, இரண்டு நாட்களுக்கு முன் ரம்ஜான் விடுமுறை ஆனாலும் 40 ஆயிரம் பணியாளர்கள் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் தலைமுறை வாக்காளர்கள் நிச்சயமாக வாக்களிப்பதில் பங்களிக்க வேண்டும். உங்கள் பெற்றோரையும் வாக்களிக்கச் செய்ய வேண்டும்.
கடந்த முறை தேர்தலின்போது, சென்னையில் இரண்டு தொகுதிகளில் 58% மற்றும் 64% வாக்குப்பதிவாகி இருந்தது. அதனை இந்த முறை 100% வாக்குப்பதிவாக மாற்ற இலக்கு வைத்துள்ளோம். நாங்கள் 80'S எங்கள் காலத்தில் ஊரும், மாவட்டமும் மேடையாக இருந்தது. ஆனால் இன்று, உங்களுக்கு உலகமே மேடையாக இருக்கிறது" என்று கூறினார்.
இதன் தொடர்ச்சியாகச் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "தேர்தலையொட்டி 24 மணி நேரமும் பணி நடந்து கொண்டிருக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் ஒட்டும் பணி அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் முடிக்கப்பட்டு, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் 5% இயந்திரங்களில் ஆயிரம் மாதிரி வாக்குப்பதிவுகள் செய்யப்பட்டுச் சரிபார்க்கப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் 30 லட்சத்து 47 ஆயிரம் பேருக்குக் கிட்டத்தட்ட 78% பேருக்கு பூத் சிலிப் வழங்கியுள்ளோம். வீடுகள் பூட்டி இருப்பது, பணிக்குச் சென்றவர்களுக்கும் பூத் சிலிப் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கைக்கான மையங்களைத் தயார் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம்.