தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரம் டிஎஸ்பிக்கு வாரண்ட்.. மூன்று முறை சம்மன் அனுப்பியும் ஆஜாராகாததால் உத்தரவு! - Viluppuram DSP warrant

Viluppuram DSP: கொலை முயற்சி வழக்கில் சாட்சியம் அளிப்பதற்கு மூன்று முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத விழுப்புரம் மாவட்ட டிஎஸ்பி ராமலிங்கத்துக்கு வாரண்ட் பிறப்பித்து சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 4:27 PM IST

File
File Image (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை தரமணி கானகம் தெருவைச் சேர்ந்தவர் தச்சு தொழிலாளியான செந்தில். இவர் வீட்டிலேயே மளிகை கடையும் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகில் வசிக்கும் வினோத் என்ற இளைஞர், அப்பகுதியில் கஞ்சா விற்று வந்துள்ளார். வினோத், அவ்வப்போது தனது நண்பர்களுடன் செந்திலின் மளிகைக்கடை முன் அமர்ந்து அரட்டை அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதை விரும்பாத செந்தில், அவர்களை கடையில் அமர வேண்டாம் எனக் கூறி துரத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வினோத், அவரது நண்பர் அரவிந்த் சேர்ந்து, 2021ஆம் ஆண்டு மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்ற செந்திலை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளனர்.

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக செந்தில் கொடுத்த புகாரின் படி, தரமணி போலீசார் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வினோத் மற்றும் அரவிந்த் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 16வது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எல்.அபிராகம் லிங்கன் முன்பு நடந்து வருகிறது.

மேலும், இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க முன்னாள் விசாரணை அதிகாரியும், தற்போதைய விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியுமான சி.ராமலிங்கத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இருப்பினும், சாட்சியம் அளிக்க அவர் ஆஜராகவில்லை. தொடர்ந்து மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும், விசாரணை அதிகாரி ஆஜராகவில்லை. இதையடுத்து, சாட்சியம் அளிக்க ஆஜராகாத விசாரணை அதிகாரி தரப்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணி காரணமாக ஆஜராக இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி ஆபிரகாம் லிங்கன், விசாரணைக்கு ஆஜராகாததற்கு அதிகாரி குறிப்பிட்டுள்ள காரணங்கள் ஏற்கதக்கதல்ல எனக் கூறி, அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து, வழக்கு விசாரணையை ஜூலை 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:“25 ஆண்டுகள் கழித்தும் நீதி வழங்காவிட்டால் நீதிமன்றம் மீது அதிருப்தி ஏற்படும்” - உயர் நீதிமன்றக்கிளை கருத்து!

ABOUT THE AUTHOR

...view details