சென்னை:விநாயகர் சதுர்த்தி விழாவானது கடந்த செப்.7ஆம் தேதி நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 1,524 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதன் பேரில், பல்வேறு அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வந்தனர்.
சென்னை கடலில் கரைக்கப்பட்டு வரும் விநாயகர் சிலைகள் (Credits- ETV Bharat Tamil Nadu) இந்த நிலையில், ஊர்வலம் அமைதியான முறையிலும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்க சென்னையில் காவல் ஆணையர் மற்றும் 3 கூடுதல் ஆணையர்கள் தலைமையில் 16,500 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள், 2,000 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 18,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளைக் கொண்டு சென்று கரைக்க வேண்டும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம், பல்கலைநகர், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க காவல் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ள 4 இடங்களில் சிலைகள் கரைக்க சென்னையில் 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிலைகளைக் கரைப்பதற்கு Conveyor Belt, கிரேன்கள், படகுகள் உதவி கொண்டு சிலைகளைக் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க தாயுடன் பல கிலோமீட்டர் பயணித்த சிறுவன்! தருமபுரியில் நெகிழ்ச்சி சம்பவம்
மேலும், சிலைகள் கரைக்கும் இடங்களில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர்கள் மூலம் கண்காணித்தும், குதிரைப்படைகள் மற்றும் மணற்பரப்பில் வேகமாக செல்லக்கூடிய All Terrain Vehicle மூலம் தீவிர ரோந்துப் பணிகள் மேற்கொண்டு கண்காணித்தும், குற்ற நிகழ்வுகள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லும் வழித்தடங்கள் மற்றும் கரைக்கும் இடங்கள்:சென்னை - நுங்கம்பாக்கம், சிந்தாதரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், சௌகார்பேட்டை, அயனாவரம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, தி.நகர், எம்.ஜி.ஆர் நகர், வடபழனி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கொளத்தூர், திருமங்கலம், மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம் ஆகிய இடங்கள் மற்றும் இதன் சுற்றுப்புற இடங்களில் உள்ள விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாகச் சென்று பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், அடையாறு, கிண்டி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் நங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நீலாங்கரை பல்கலை நகர் கடலில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வடசென்னை பகுதியான தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, இராயபுரம், தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், கொடுங்கையூர், மாதவரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடலில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் கடலில் கரைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டு, சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் அனுமதியுடன் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைபிடித்து அமைதியான முறையில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க சென்னை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விதிமுறைகளுக்கு கீழ் சென்னை முழுவதும் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகிறது.