சென்னை:சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பெரியமேட்டில் மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "படுகொலை நடந்த மூன்று மணிநேரத்தில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் உடன் வீட்டின் வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்த நபர்கள் படுகாயத்துடன் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையின் படி, இந்த கொலை அரசியல் பழிவாங்கலுக்காக நடந்தது போல் தெரியவில்லை. எந்த வாகனத்தில் வந்தார்கள், எம்மாதிரியான ஆயுதங்களை பயன்படுத்தினார்கள் என்பது குறித்த விசாரணை நடைபெறுகிறது.
மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பொன்னை பாலுவின் அண்ணன் ஆற்காடு சுரேஷ் சிறையில் இருக்கும் போது என்ன நடந்தது என விசாரித்து, அதற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருகிறதா என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட பொன்னை பாலு மீது 4 வழக்கு, மணிவண்ணன் மீது 4 வழக்கு என ஒருவர் தவிர மற்றவர்கள் மீது வழக்குகள் உள்ளது.
இதுவரை பிடிப்பட்டவர்களில் தென்மாவட்ட குற்றவாளிகள் இல்லை. பாலு வேலூர் மாவட்டம், மணிவண்ணன் திருவள்ளுர், திருமலை பெரம்பலூர். கடந்த ஓராண்டு காலமாக ஆயிரத்து 192 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் போடப்படுள்ளது. இதனால் அனைத்து ரவுடிகள் மீதும் இப்போது தீவிர கண்காணிப்பு உள்ளது. தற்பொழுது கூடுதல் கண்காணிப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.