சென்னை: சென்ட்ரல் பகுதிியிலுள்ள மத்திய சதுக்க வளாகத்தில் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் சார்பில், தரைத்தளம் மற்றும் 27 அடுக்குமாடியுடன் ரூ. 350 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சென்ட்ரல் கோபுர கட்டடத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 14) அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில், சென்ட்ரல் கோபுரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு செய்திக்குறிப்பில், “சென்னை சென்ட்ரல் பகுதியை உலகத்தரம் வாய்ந்த அடையாளமாக மேம்படுத்தும் நோக்கில், மத்திய சதுக்கத் திட்ட கட்டுமானப் பணிகளை சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
சென்ட்ரல் ரயில் நிலையம், புறநகர் சென்ட்ரல் ரயில் முனையம், பூங்கா ரயில் நிலையம், பூங்கா நகர் ரயில் நிலையம், சென்ட்ரல் மெட்ரோ நிலையம், பெருநகர சென்னை மாநகராட்சி, தென்னக ரயில்வே தலைமையகம் மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றிற்கிடையே பொதுமக்கள் எளிதில் சென்றுவருவதற்கு ஏதுவாக, மத்திய சதுக்கம் போக்குவரத்து ஒருங்கிணைப்பு மையமாக செயல்பட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சமவீத பங்களிப்புடன், கூட்டு முயற்சி அடிப்படையில், சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டது. தற்போது இந்நிறுவனம் சென்னை சென்ட்ரல் கோபுரக் கட்டுமான பணிகளைச் செயல்படுத்தவுள்ளது.