சென்னை: பபாசி நடத்தும் 48-ஆவது புத்தகக் கண்காட்சியை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ (YMCA Grounds) மைதானத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர். கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட புத்தக கண்காட்சி, ஜனவரி 12 ஆம் தேதி வரை மொத்தம் 17 நாட்கள் நடைபெற உள்ளது.
புத்தக கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள்:
புத்தக பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான புத்தக கண்காட்சி, விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறுகிறது. புத்தக கண்காட்சியை பார்வையிட நுழைவுக்கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாரதியார் வேடம் அணிந்த வாசகர் ஆனந்த் குமார் பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu) மேலும், புத்தக வாசிப்பாளர்கள் தங்களுக்கு தேவையான படைப்புகளை எளிதாக பெறுவதற்கு வசதியாக 900 அரங்குகள் அமைக்கப்பட்டு, 10 சதவீதம் தள்ளுபடியுடன் மக்களுக்காகச் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புத்தக கண்காட்சி நடைபெறும் இடத்தில், ஒவ்வொரு நாள் மாலையில் சிந்தனை அரங்கில், தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் உரைகள் நடைபெற உள்ளது.
புத்தகக் கண்காட்சிக்கு வருகை புரிந்துள்ள மக்கள் (ETV Bharat Tamil Nadu) அரங்கங்கள்:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படிக்கக்கூடிய அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கியம், வரலாறு, மொழிபெயர்ப்பு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பபாசியில் உறுப்பினர் அல்லாதவர்கள் விண்ணப்பித்த பெரும்பாலானோருக்கும் அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென்று தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ஏற்பாடுகள்:
பொதுமக்கள் பார்வைக்காக திருவள்ளுவர், காந்தி மற்றும் வ.உ.சி சிதம்பரனார் போன்ற தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புத்தகங்களை வாங்கி செல்லும் வகையில் 9 நுழைவு வாயில்கள் மற்றும் நான்கு வெளிவரும் வாயில்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அடிப்படை தேவையான கழிவறைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.
புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் (ETV Bharat Tamil Nadu) புத்தக கண்காட்சி குறித்து பதிப்பாளர்கள் மற்றும் வாசகர்கள் ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளனர். அப்போது, பாரதியார் வேடம் அணிந்த ஆனந்த் குமார் பேசுகையில், " பாரதியார் கவிதை, புத்தகம், பாடல்கள், கதைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இந்த நுழைவு வாயிலின் பெயர் பாரதியார் நுழைவுவாயில். புத்தகக் கண்காட்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் பாரதியார் வேடமணிந்து வந்துள்ளேன்.
இதையும் படிங்க:சென்னையில் இலவச ஓவியக் கண்காட்சி.. இன்றே கடைசி நாள்!
அதிகளவில் புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும், அவை மன அழுத்தத்தை குறைக்கும். அனைத்து துறைகளுக்கு தேவையான புத்தகங்களும் உள்ளது. சென்னை மக்கள் யாரும் இந்த வாய்ப்பினை தவறவிட வேண்டாம். இதன் பின்னர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், புரட்சித் தலைவர் எம்ஜிஆர், மகாத்மா காந்தி, பகத்சிங் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் வேடத்தில் வர திட்டமிட்டுள்ளேன்” என்றார்.
புத்தகக் கண்காட்சியில் வாசிப்பாளர்கள் (ETV Bharat Tamil Nadu) அதனைத்தொடர்ந்து, எழுத்தாளரும் கதை சொல்லியுமான பாரதி கனகராஜ் கூறுகையில், "ஏராளமான மக்கள் கண்காட்சிக்கு வந்துள்ளனர். நூல் வனம் என்னும் பதிப்பகத்தில் குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்கள் உள்ளன. பதினாறு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தமிழில் இருக்கக்கூடிய நூல்களை படிப்பதில்லை. எனவே, அதை சாத்தியப்படுத்துவதற்காக, நூல் வனம் பதிப்பகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்கள் உள்ளன. சென்னையில் வருடந்தோறும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது” என்றார்.
தொடர்ந்து, கும்பகோணத்தைச் சேர்ந்த வாசகர் ஜெயக்குமார் பேசுகையில், "புததக கண்காட்சியில் இந்த முறை குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். கண்காட்சியை பார்ப்பதற்கு நேரமில்லை, இன்னும் இரண்டு மூன்று நாட்கள் வந்து பார்த்தால் திருப்தி அடையும். அந்த அளவிற்கு புத்தகங்கள் இருக்கிறது.
ஏற்பாடுகளும் சிறப்பாக உள்ளது. வாழ்க்கைக்கு புத்தக வாசிப்பு என்பது மிக மிக முக்கியம். அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை இலவசமாக வழங்கியுள்ளேன். உலகத்தில் இருக்கும் பொழுதுபோக்குகளை விட புத்தகம் படிப்பது சிறந்த பொழுதுபோக்கு” இவ்வாறு அவர் தெரிவித்தார்.