சென்னை: சென்னையில் உள்ள அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் மகாவிஷ்ணு என்பவர் பங்கேற்ற சொற்பொழிவு நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை கிளப்பிய சம்பவம் குறித்து தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவையின் மாநில தலைவர் பா.ஆரோக்கியதாஸ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "மூட சித்தாந்தகர் மகாவிஷ்ணுவை அழைத்து சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு மாதிரி மேனிலைப்பள்ளிகளில் நிகழ்ச்சி நடத்திய சம்பவம் குறித்து விசாரணை செய்து நடவடிக்கைகள் எடுக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், குழு விசாரணையை தொடங்கும் முன்னரே அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியரையும், சைதாப்பேட்டை பள்ளி தலைமை ஆசிரியரையும் பணிஇட மாறுதல் செய்திருப்பது விதிகளுக்கு முரணானதாகும். ஆகவே, மூட சித்தாந்தர் மகா விஷ்ணுவை அழைத்து பள்ளியில் நிகழ்ச்சி நடத்திய சம்பவத்தில் சென்னை மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் அப்பள்ளிகளின் SMC நிர்வாகிகளின் தலையீடு இல்லாமல் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே காரணமாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
மேலும், பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் விசாரணை நடத்த குழு அமைத்திருக்கும்போது, பேற்குறிப்பிட்ட இரண்டு பள்ளி தலைமை ஆசிரியர்களையும் அவசரம் அவசரமாக பணியிட மாறுதல் செய்திருப்பது விதிகளுக்கு முரணானது.
இந்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக எந்த முகாந்திரமும் இதுவரை தெரியவில்லை. ஆகவே, சென்னை மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் அப்பள்ளிகளின் SMC நிர்வாகிகளுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்த வேண்டும் முழு விசாரணைக்கு பிறகே எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுப்பது சரியாக இருக்கும்.
ஆகையால் விசாரணை முடியும் வரை 2 பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணியிட மாறுதல் உத்தரவை பள்ளிக்கல்வித்துறை உடனே திரும்பி பெற வேண்டும்.மேலும், தலைமை ஆசிரியர்கள் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வு, வாழ்க்கையில் தன்னம்பிக்கை மற்றும் பொதுத்தேர்வுகளுக்கு தயாராகுவது போன்ற தலைப்புகளில் வழி காட்டவே மகாவிஷ்ணுவை அழைத்துள்ளார்கள்.