சென்னை:சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் சென்னை - மும்பை மற்றும் சென்னை - கொச்சின் என அடுத்தடுத்து 2 விமானங்கள் புறப்பட்டு சென்று நடுவானில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு, பின்னர் சரிசெய்யப்பட்டு, தாமதமாக கிளம்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவம் விமான பயணிகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்பத்தியுள்ளது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 4:40 மணிக்கு மும்பைக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 160 பயணிகள் 8 விமான ஊழியர்கள் என 168 பேருடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, விமானி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு:
தொடர்ந்து விமானம் வானில் பறக்கத் தொடங்கினால், பெரும் ஆபத்து வரும் என்பதை உணர்ந்த விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி பழுதடைந்த இயந்திரங்களை சரி பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டு இருந்தனர்.
அடுத்தடுத்து ஏற்பட்ட கோளாறு:
அதேபோல, இன்று காலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து கொச்சி செல்லும் ஸ்பைஜெட் தனியார் பயணிகள் விமானம் 84 பயணிகள் 6 விமான ஊழியர்கள் 90 பேருடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்துள்ளார்.
இதையடுத்து விமானி அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், உடனடியாக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதையும் படிங்க:ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் இயந்திர கோளாறு.. சிங்கப்பூர் செல்ல முடியாமல் 162 பயணிகள் சென்னையில் தவிப்பு!
பின்னர், அந்த விமானம் காலை 7.15 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து பத்திரமாக கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். பழுது பார்த்த பின்னர், காலை 8.36 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் கொச்சி புறப்பட்டுச் சென்றது.
பயணிகள் அச்சம்:
விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு விமானி கண்டுபிடித்து சென்னை விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கப்பட்டதால் விமானத்திலிருந்த 84 பயணிகள் உட்பட 90 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தற்போது, சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் மும்பை, கொச்சி ஆகிய 2 விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல், நேற்று சென்னை - சிங்கப்பூர் ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னையிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக விமானத்தின் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, விமான அதனைத் தக்க சமயத்தில் கண்டுபிடித்துச் சரி செய்த சம்பவம் நிகழ்ந்தது. தற்போது, விமானம் கிளம்பும் நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு வரும் வரும் சம்பவம் விமான பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.